முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோனியாவை எதிர்த்து முன்னாள் தளபதி வி.கே.சிங் போட்டி?

சனிக்கிழமை, 24 ஆகஸ்ட் 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஆக. 25 - உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை எதிர்த்து பா.ஜ.க சார்பில் நாட்டின் முன்னாள் ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங் போட்டியிடக் கூடும் என்று அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. ராணுவ தலைமை தளபதியாக இருந்த வி.கே.சிங், தாம் ஓய்வு பெறும் போது ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்தார். ஓய்வு பெற்ற பின்னர் வெளிப்படையாக அரசுக்கு எதிராக அன்னா ஹசாரேவின் இயக்கத்தில் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டார்.

அத்துடன் பாரதிய ஜனதா கட்சியினருடனும் அவர் தொடர்புகளை வலுப்படுத்தி வந்தார். இந்த நிலையில் ரேபரேலி தொகுதியில் சோனியாவை எதிர்த்து வி.கே.சிங், பாஜக வேட்பாளராக போட்டியிடக் கூடும் என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது பற்றி கருத்து தெரிவித்த பெயர் வெளியிட விரும்பாத பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவர், ராஜ்யசபா சீட்டை வி.கே.சிங் கோரியிருந்தார். ஆனால் பா.ஜ.க. தலைமையோ தேர்தலில் போட்டியிடுமாறு கூறியிருந்தது. அவரை ரேபரேலியில் நிறுத்தலாமா என்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்றார். ஆனால் அதிகாரப்பூர்வமாக இதை பா.ஜ.க. மறுத்து வருகிறது. பாரதிய ஜனதா கட்சியைப் பொறுத்தவரை சோனியாவை எதிர்த்து வி.கே.சிங் நின்று தோற்றாலும் சோனியாவின் வெற்றி வாய்ப்பு எண்ணிக்கையை கணிசமாகக் குறைக்க முடியும் என்று கருதுவதாகவும் தெரிகிறது.

இதனிடையே வி.கே.சிங் மீதான அவதூறு வழக்கை விசாரித்து வரும் டெல்லி மாஜிஸ்திரேட் மிகக் கடுமையாக அவரை விமர்சனம் செய்திருக்கிறார். தாத்ரா நிறுவனத்திடம் இருந்து ஆயுத கொள்வனவு செய்ததில் முறைகேடு நடந்தது தொடர்பாக முன்னாள் லெப். ஜெனரல் தேஜிந்தர்சிங் மீது புகார் கூறப்பட்டது. இதைக் கண்டித்து வி.கே.சிங் உள்ளிட்ட 4 பேர் மீது திஜேந்தர் சிங் டெல்லி நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணை புதன்கிழமையன்று நடைபெற்ற போது, வி.கே.சிங் அமெரிக்காவுக்கு செல்ல வேண்டியிருப்பதால் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க கோரப்பட்டது. இதற்குப் பதிலளித்த நீதிபதி, வி.கே.சிங் எப்போது நீதிமன்றத்துக்கு வந்தாலும் கூட்டமாக வந்து நியூசென்ஸாகவே இருக்கிறார். அவர் நீதிமன்றத்துக்கு வராமலேயே இருந்தால் போதும்.. வழக்கு விசாரணை ஒழுங்காக நடைபெறும் என்று கடுப்படித்தார். அத்துடன் நீதிமன்றத்தில் அவர் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்தும் அனுமதி கொடுத்தார். நாட்டின் முன்னாள் ராணுவ தலைமை தளபதியை மாஜிஸ்திரேட் கடுமையாக விமர்சித்தது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்