முக்கிய செய்திகள்

சிறுமி பலாத்காரம் வழக்கில் தண்டனையை உறுதி செய்தது சுப்ரீம் கோர்ட்

திங்கட்கிழமை, 9 மே 2011      இந்தியா
Supreme court of india 3

 

புது டெல்லி,மே.10 - காஞ்சிபுரத்தை சேர்ந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் முருகன் என்பவருக்கு செசன்ஸ் நீதிமன்றம் விதித்த 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது. மேலும் சிறுமியை கடத்தி முருகனுக்கு உதவி செய்த சிவா, ராமலிங்கம் ஆகிய இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டிருந்ததையும் சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது. 

கடந்த 1998 ல் காஞ்சிபுரத்தில் தனியார் பள்ளி ஒன்றில் படித்து வந்த 14 வயது மாணவி ஒருவரை முருகன் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து அவரை திருமணம் செய்து கொண்டதாகவும், பள்ளியில் இருந்து சிறுமியை கடத்த சிவா, ராமலிங்கம் ஆகிய இருவரும் உதவி செய்ததாகவும் அப்போது குற்றச்சாட்டு எழுந்தது. 

நீதிமன்ற விசாரணையின் போது தான் கடத்தி திருமணம் செய்து கொண்ட பெண்ணுக்கு 18 வயது என்றும் அவரது விருப்பத்தின் பேரில்தான் அவருடன் பாலியல் உறவு வைத்துக் கொண்டதாகவும் முருகன் தெரிவித்தார். ஆனால் பாதிக்கப்பட்ட சிறுமி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இதை கடுமையாக எதிர்த்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 14 வயது ஆகவில்லை என்பதற்கான சான்றுகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. இதையடுத்து நீதிமன்றம் முருகனுக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், அவரது குற்ற செயலுக்கு  உடந்தையாக இருந்த இருவருக்கும் தலா 3 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டது. 

மூவரும் இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். ஆனால் இவர்களின் மனுவை ஐகோர்ட்டும் நிராகரித்தது. இதையடுத்து அவர்கள் சுப்ரீம் கோர்ட்டை நாடினர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது மூவர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். முருகனுக்கு செசன்ஸ் நீதிமன்றம் விதித்த 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையையும், சிவா, ராமலிங்கம் ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருந்த தலா 3 ஆண்டுகள் தண்டனையையும் நீதிபதி உறுதி செய்து உத்தரவிட்டார். 

மேலும் குற்றவாளிகளுக்கு அளிக்கப்பட்டிருந்த ஜாமீனை ரத்து செய்தார். 30 நாட்களுக்குள் காஞ்சிபுரம் தலைமை ஜூடிசியல் நீதிபதி முன்பு ஆஜராக வேண்டும் என்றும் இல்லாவிடில் மூவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: