முக்கிய செய்திகள்

5 மாநிலங்களில் நாளை வாக்கு எண்ணிக்கை

புதன்கிழமை, 11 மே 2011      அரசியல்
Qureshi 0

புது டெல்லி,மே.12  - தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்கம், கேரளா, அசாம் ஆகிய 5 மாநிலங்களில் உள்ள 839 வாக்கு எண்ணும் மையங்களில் நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கி நடைபெறுகிறது. நாளை வெள்ளிக் கிழமை நண்பகலுக்குள் கிட்டத்தட்ட முடிவுகள் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை முன்னிட்டு விரிவான மற்றும் மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் 5 மாநிலங்களிலும் செய்யப்பட்டுள்ளன. இதையொட்டி கிட்டத்தட்ட 17,700 மத்திய பாதுகாப்பு வீரர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட இருக்கிறார்கள். 43, 982 அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுபட இருக்கிறார்கள். முதல் முடிவு எப்போது வெளிவரும் என்று இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷியிடம் கேட்ட போது மதிய உணவிற்குள் இருக்கும் என்று பதிலளித்தார். 

வாக்கு எண்ணும் பணிகள் அனைத்தும் முறைகேடை தவிர்க்கும் பொருட்டு வீடியோ படம் எடுக்கப்படும் என்றும் குரேஷி தெரிவித்தார். ஓட்டு எண்ணிக்கை நடைபெறுவதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் திறம்பட செய்யப்பட்டிருப்பதாகவும் குரேஷி தெரிவித்தார். வாக்கு எண்ணும் மையத்திற்குள் ஒரு கம்ப்யூட்டர் சென்டரே செயல்படும் என்றும் குரேஷி தெரிவித்தார். 

தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இவற்றில் தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 13 ம் தேதி ஓட்டுப்பதிவு நடந்தது. முன்பெல்லாம் ஓட்டுப் பதிவு நடந்து முடிந்த மூன்று நாட்களில் முடிவுகள் தெரிந்து விடும். ஆனால் இந்த முறை முடிவு தெரிய ஒரு மாதம் காத்திருக்க வேண்டியதாகி விட்டது. மேற்கு வங்கத்தில் 6 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. நேற்று முன்தினம் 6 வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நடந்து முடிந்தது. இந்த 5 மாநிலங்களிலும் நாளை வாக்குகள் எண்ணப்படுகின்றன. தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்களிலும் ஆட்சியை பிடிக்கப் போவது யார் என்ற மக்களின் எதிர்பார்ப்புக்கு நாளை மதியத்திற்குள் விடை கிடைத்து விடும்.

இதை ஷேர் செய்திடுங்கள்: