முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாளை வாக்கு எண்ணிக்கை - ஏற்பாடுகள் தீவிரம்

புதன்கிழமை, 11 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,மே.12 - தமிழக சட்டப் பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாளை வெள்ளிக் கிழமை நடைபெறுகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 13 ம் தேதி வாக்குப் பதிவு நடந்தது. இதுவரை இல்லாத அளவுக்கு 78 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் மே மாதம் 13 ம் தேதி எண்ணப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்காக 91 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

வாக்கு எண்ணும் ஒவ்வொரு மையத்துக்கும் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு அருகே வெளி மாநிலங்களை சேர்ந்த மத்திய போலீஸ் படையினரும், மையத்தின் வளாகங்களில் தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படையினரும் வெளிப்புறப் பகுதிகளில் தமிழக போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கைக்கான பாதுகாப்பு பணியை மேற்கொள்ள வெளி மாநிலங்களை சேர்ந்த 4 ஆயிரத்து 500 மத்திய போலீஸ் படையினர் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். 

ஒரு மையத்தில் ஆறு முதல் 7 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. ஒவ்வொரு தொகுதியிலும் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. அந்த அறைகளின் அனைத்து ஜன்னல்களும் சிமிண்ட் கலவையால் பூசப்பட்டு அடைக்கப்பட்டு உள்ளன. அதுவும் இரண்டு பூட்டுகளால் பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையங்களை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அடிக்கடி சென்று பார்வையிட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணும் மையங்களுக்கு யார் யார் வருகிறார்கள் என்பது குறித்த விவரங்களை அறிந்து கொள்ள பதிவேடும் வைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களை தேர்தல் அதிகாரிகள், காவல் துறையினருடன் வேட்பாளர்களின் முகவர்களும் கண்காணித்து வருகின்றனர். 

வாக்கு எண்ணும் போது ஒவ்வொரு தொகுதியில் பதிவான வாக்குகளும் தனித்தனியே எண்ணப்படவுள்ளன. குறைந்தது 14 மேஜைகளை கொண்டு வாக்குகள் எண்ணப்படும். வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க ஒரு தொகுதிக்கு ஒரு பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளார். ஒவ்வொரு மேஜையிலும் வாக்குகளை எண்ணி முடித்த பிறகு பார்வையாளர்களின் ஒப்புதலை பெற வேண்டும். இதன் பிறகே முடிவுகள் அறிவிக்கப்படும். ஒவ்வொரு மேஜையிலும் ஒரே நேரத்தில் வாக்குகள் எண்ணப்படும். அதாவது ஒரு மேஜையின் ஒரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்தாலும் அருகில் உள்ள மேஜையில் அந்த சுற்றின் வாக்குகள் எண்ணப்பட்ட பிறகே அனைத்து மேஜைகளிலும் அடுத்த சுற்றுக்கு வாக்குப் பதிவு எந்திரங்கள் தரப்படும். 

ஒவ்வொரு மேஜையிலும் வாக்குகளை எண்ணும் நிகழ்வு வீடியோ மூலம் படம் பிடிக்கப்பட்டு பெரிய திரையில் ஒளிபரப்பு செய்யப்படும். இதை வேட்பாளர்களின் முகவர்கள் பார்த்து குறித்து கொள்ளலாம். இதனால் குழப்பங்கள் தவிர்க்கப்படும். நாளை வெள்ளிக் கிழமை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. அரை மணி நேரத்திற்கு பிறகு மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில் உள்ள வாக்குகள் எண்ணப்படும். நண்பகல் 12 மணிக்கு பிறகே முழுமையான அளவில் முடிவுகள் தெரியும். கடந்த தேர்தல்களில் காலை 11 மணிக்குள் முடிவுகள் தெரிந்தன. ஆனால் இந்த முறை பார்வையாளர்களின் ஒப்புதல் இல்லாமல் அறிவிக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதால் முழுமையான அளவில் முடிவுகள் வெளியாக சிறிது காலதாமதம் ஏற்படக் கூடும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறுகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony