முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜராவதிலிருந்து கனிமொழிக்கு விலக்கு

புதன்கிழமை, 11 மே 2011      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி,மே.12 - 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் தொடர்பாகவும் கலைஞர் டி.வி.க்கு ரூ. 200 கோடி கைமாறியது தொடர்பாகவும் சி.பி.ஐ.கோர்ட்டில் ஆஜராவதிலிருந்து கனிமொழிக்கு 2 நாட்கள் விலக்கு அளித்து சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து அவர் இன்று சென்னை வருமானவரி அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கிறார். இதன்மூலம் இன்றும் நாளையும் டெல்லியில் நடக்கும் விசாரணையில் கனிமொழி ஆஜராக தேவையில்லை. இதேபோல் கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமாருக்கும் இதே அடிப்படையில் இரண்டு நாட்கள் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக இதுகுறித்து கருத்து தெரிவித்த நீதிபதி ஷைனி சென்னை வருமானவரி அலுவலகத்தில் இருவரும் ஆஜராக வேண்டும் என்று கோரியிருக்கிறார்கள். எனவே அவர்களின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்று தெரிவித்தார். அதே நேரம் சில நிபந்தனைகளையும் நீதிபதி ஷைனி விதித்தார். சென்னையில் இருக்கும்போது ஆதாரங்களை அழிக்கவோ, சாட்சிகளை கலைக்கவோ, அல்லது அவர்களோடு தொடர்பு கொள்ளவோ முயற்சி செய்யக்கூடாது என்று அவர் உத்தரவிட்டார். அதேநேரம் இந்த இரண்டு நாட்களும் வழக்கு விசாரணை நடவடிக்கைகளில் கோர்ட்டில் இவர்களது வழக்கறிஞர்கள் இருக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார். சிறப்பு அரசு வழக்கறிஞர் லலித்தும் கனிமொழியின் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. முன்னதாக கனிமொழியின் வழக்கறிஞர் அல்டாப் அகமது கோர்ட்டில் ஆஜராகி கனிமொழியும் சரத்குமாரும் 12-ம் தேதி சென்னையில் இருக்க வேண்டும். கனிமொழி காலை 11 மணிக்கு இருக்க வேண்டும். சரத்குமார் 12-30 மணிக்கு வருமானவரி அலுவலகத்தில் இருக்க வேண்டும் என்பதை விளக்கினார். மேலும் அவர் கூறுகையில் வருமானவரி அலுவலகத்தில் இருந்து இவர்களுக்கு நோட்டீசு வந்துள்ளது. எனவே அதே நாளில் இவர்கள் சென்னையில் இருந்து திரும்பி வர முடியாது. எனவே 12 மற்றும் 13-ம் தேதிகளில் இவர்கள் ஆஜராவதிலிருந்து விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதை நீதிபதி ஷைனியும் ஏற்றுக்கொண்டார். அரசு வழக்கறிஞரும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. இதன்மூலம் கனிமொழி மற்றும் சரத்குமாருக்கு 2 நாட்கள் கோர்ட்டில் ஆஜராவதிலிருந்து தற்காலிக நிம்மதி கிடைத்துள்ளது. தேர்தல் முடிவு வெளியாகும் 13-ம் தேதியும் மற்றும் இன்றும் கனிமொழி சென்னையில் தங்கியிருப்பார். இன்று அவர் சென்னை வருமானவரி அலுவலகத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony