முக்கிய செய்திகள்

ராகுல் காந்தியின் தர்ணா ஒரு நாடகம் - மாயாவதி

வெள்ளிக்கிழமை, 13 மே 2011      இந்தியா
Mayawati

லக்னோ,மே.13 - விவசாயிகளுக்கு ஆதரவாக ராகுல் காந்தி மற்றும் சில கட்சித்தலைவர்கள் நடத்திய தர்ணா போராட்டமானது ஒரு நாடகம் என்று உத்திரப்பிரதேச மாநில முதல்வர் மாயாவதி குற்றஞ்சாட்டியுள்ளார். உத்திரப்பிரதேச மாநிலத்தில் கிரேட்டர் நொய்டா விவசாயிகளுக்கு ஆதரவாக நேற்றுமுன்தினம் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி திடீரென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனையொட்டி அவர் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசார் நேற்று உத்திரப்பிரதேச மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தினர். இதில் மாநில காங்கிரஸ் தலைவர் ரீடா பகுகுணா ஜோஷி உள்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். மேலும் பாரதிய ஜனதா, சமாஜ்வாடி கட்சி தலைவர்களும் நேற்று விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினர். இதுகுறித்து முதல்வர் மாயாவதி நேற்று லக்னோ நகரில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் விவசாயிகளுக்கு ஆதரவு என்று காங்கிரசார் மற்றும் மாநிலத்தில் உள்ள எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்துவது வெறும் நாடகம் என்றார். கிரேட்டர் நொய்டாவில் உள்ள பாத்தா பார்சாவ்லில் நடந்த மோதலானது நிலத்திற்கு நஷ்டஈடு கொடுத்தது சம்பந்தமானது அல்ல. மக்களிடையே பொய் கூறி மக்களை திசை திருப்பி மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க எதிர்க்கட்சியினர் முயற்சி செய்கிறார்கள். இதற்கு ஒரு உதாரணம் நொய்டாவில் நடந்த கலவரம் என்றும் மாயாவதி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: