எண்டோசல்பானுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை

Endosulfan

 

புதுடெல்லி,மே.13 - உடலுக்கும், சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிப்பதாக கருதப்படும் எண்டோசல்பான் பூச்சிகொல்லி மருந்தை தயாரிப்பதற்கு தொடர்ந்து அனுமதி அளித்திருப்பது பற்றி மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக இடைக்கால ஒன்றை பிறப்பிக்க இருப்பதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது. 

எண்டோசல்பானை தடை செய்ய வேண்டும் என்று கோரி மார்க்சிஸ்ட் கட்சியின் இளைஞர் பிரிவான ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கபாடியா தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் வேணுகோபால் ஆஜரானார். உலகின் மொத்த எண்டோசல்பான் உற்பத்தியில் இந்திய தனியார் துறையின் பங்கு 70 சதவீதம் என்று அவர் தெரிவித்தார். 

மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியம் ஆஜரானார். முதலில் எண்டோசல்பான் உற்பத்தியை நிறுத்துங்கள். அதன் பிறகு அது பயன்படுத்தப்படும் என்கிற கேள்வியே இருக்காது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். எண்டோசல்பான் உற்பத்தியாளர்களின் கருத்தை கேட்காமல் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு எதையும் பிறப்பிக்க கூடாது என்று உற்பத்தியாளர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சோலி சோரப்ஜி தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் இப்போது எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்றாலும் சரி செய்ய முடியாத அளவுக்கு பாதிப்பு ஏற்படும் என்றனர். 

எண்டோசல்பானுக்கு தடை விதிப்பதற்கு முன்பாக பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு மாற்று ஏற்பாட்டை செய்வதற்கான வழிமுறைகளை அரசு ஆராய வேண்டியதிருக்கிறது. அதனால் வரும் ஜூலை மாதம் வரை அவகாசம் அளிக்க வேண்டும் என்று கோபால் சுப்பிரமணியம் கூறினார். 

இதுநாள் வரையில் நீங்கள் எந்த மாற்று ஏற்பாட்டையும் செய்யாமல் உற்பத்தி செய்வதில் முதலீடு செய்யப்படுவதை ஊக்குவித்திருக்கிறீர்கள் என்று நீதிபதிகள் கூறினர். இந்த வழக்கு வெள்ளிக் கிழமை விசாரணைக்கு வரும் என்று தெரிவித்த நீதிபதிகள் அப்போது எண்டோசல்பான் விற்பனைக்கும், தயாரிப்புக்கும் இடைக்கால தடை விதிக்கலாமா என்பது குறித்து உத்தரவிடப்படும் என்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ