முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெள்ளத்தில் மிதக்கும் ஆந்திரா: தொடர்ந்து மழை பெய்யுமாம்

ஞாயிற்றுக்கிழமை, 27 அக்டோபர் 2013      இந்தியா
Image Unavailable

ஐதராபாத், அக். 28 - மழை வெள்ளத்தால் ஆந்திராவின் பல பகுதிகள் மிதக்கின்றன. அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒடிசாவிலும் அதே நிலைதான். இரு மாநிலங்களிலும் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது. 

ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் கடந்த சில நாட்களாக மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக ஆந்திராவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த 5 நாட்களாகவே இடைவிடாத மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்த தொடர் மழையால் சுவர் இடிந்து விழுதல் உட்பட பல்வேறு சம்பவங்களில் இதுவரை இம்மாநிலத்தில் 42 பேர் பலியாகி விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

 

சுமார் 8 லட்சம் ஹெக்டேரில் பயிர்கள் தண்ணீரில் மிதக்கின்றன. 5 பேரை காணவில்லையாம். 84,769 பேர் பாதுகாப்பான இடங்களுக்கும் முகாம்களுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். மீட்பு பணிகளில் 19 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 580 மருத்துவ குழுக்கள் மக்களுக்கு உதவி செய்யும் வகையில் களத்தில் இறக்கி விடப்பட்டுள்ளனர். 8 லட்சம் ஹெக்டேரில் நெல், சோளம், நிலக்கடலை, கரும்பு, புகையிலை மற்றும் தோட்டக்கலை பயிர்கள் தண்ணீரில் மிதக்கின்றன. 1020 சிறிய குளங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. 4047 கி.மீ. தூரத்திற்கு சாலைகள் நாசமடைந்துள்ளன. சுருக்கமாக சொன்னால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகவே பாதிக்கப்பட்டுள்ளது. எங்கு பார்த்தாலும் வெள்ளக் காடாகவே காட்சியளிக்கிறது. தாழ்வான பகுதிகளில் எல்லாம் தண்ணீரால் சூழப்பட்டுள்ளன. விசாகப்பட்டினம் போன்ற இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நதிகள் அபாய கட்டத்தைதாண்டி ஓடிக் கொண்டிருக்கின்றன.

 

விஜயவாடா, விசாகபட்டினம் இடையே பல இடங்களில் தண்டவாளங்கள் தண்ணீரால் சூழப்பட்டிருப்பதால் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் மக்கள் அவதிக்கு ஆளாகி இருக்கிறார்கள். இந்த லட்சணத்தில் கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கலங்கி போயிருக்கிறார்கள். ஒடிசாவிலும் இதே நிலைதான். இங்கு மழைக்கு 19 பேர் பலியாகி விட்டனர். சுவர் இடிந்து விழுந்ததிலும், நீரில் மூழ்கியும் இவர்கள் பலியாகி விட்டனர். 10 மாவட்டங்களில் 16 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் இயல்பு நிலை விரைவில் திரும்பும் என்று மாநில அரசு நம்பிக்கை தெரிவித்திருக்கிறது. எது எப்படியோ இரு மாநிலங்களிலும் இந்த மழைக்கு மொத்தம் 51 பேர் உயிரிழந்து விட்டார்கள் என்பதுதான் வேதனைக்குரிய விஷயம். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்