இன்று ஜி.எஸ்.எடி.-8 விண்ணில் செலுத்தப்படுகிறது

GSAT-8

சென்னை,மே.21 - இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் தயாரித்துள்ள ஜி.எஸ்.எடி. 8 செயற்கை கோள் இன்று பிரான்சு கயானா தீவில் இருந்து செலுத்தப்படவுள்ளது.  இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் நவீன தகவல் தொடர்புக்கான 2 செயற்கை கோள்களை இந்தியாவில் இருந்து விண்ணில் ஏவ முயற்சித்தது. ஆனால் 2 முறையும் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் தற்போது உருவாக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.எடி. 8 செயற்கை கோள் மிகவும் அவசியமானதாகும். எனவே இதை தோல்வியடையாமல் விண்ணில் செலுத்த விஞ்ஞானிகள் முடிவு செய்தனர். இந்த நவீன செயற்கை கோளை பிரான்சு நாட்டில் உள்ள கயானா தீவில் இருக்கும் ஏவுதளத்தின் மூலம் ஏரியன்ஸ் பேஸ் ராக்கெட் மூலம் ஏவ முடிவு செய்துள்ளனர். 

இதன்படி இன்று அதிகாலை 2 மணி 8 நிமிடத்திற்கு ஏவ உள்ளனர். ஏவ உள்ள ஜி.எஸ்.எடி. 8 செயற்கை கோள் தொலைக்காட்சி ஒளிபரப்பு, இணையதள தொடர்புகள், தானியங்கி பணம் தரும் நிலையங்களை இயக்குதல் போன்றவற்றுக்கு உதவிகரமாக இருக்கும். இது சக்திவாய்ந்த செயற்கை கோள். 24 கே.யு.பாண்டு டிரான்ஸ்பாண்டர்கள் இதில் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது. இதனால் தரையிறங்கும் விமானங்கள் கூட விபத்தில்லாமல் பயனடையும். 3 ஆயிரத்து 100 கிலோ எடையுள்ள இந்த செயற்கை கோள் விண்ணில் இருந்த படி 12 ஆண்டுகள் பணிபுரியும். இந்த செயற்கை கோளின் இயக்கம் மற்றும் செயல்பாடுகளை கர்நாடக மாநிலம் ஹசனில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழக அதிகாரிகள் மேற்கொள்வார்கள் என இஸ்ரோ செய்தி தொடர்பாளர் சதீஷ் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ