முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஷஸ் 5-வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா அபார வெற்றி

ஞாயிற்றுக்கிழமை, 5 ஜனவரி 2014      விளையாட்டு
Image Unavailable

 

சிட்னி, ஜன. 6 - சிட்னி நகரில் நடைபெற்ற ஆஷஸ் தொடர் 5_வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 281 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை தோற்கடித்தது. 

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 5_ 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியுள்ளது. இங்கிலாந்து  அணி ஒயிட்வாஷ் ஆனது. 

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடர் 5 _வது டெஸ்ட் போட்டி சிட்னி நகரில் நடந்தது. 

இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 326 ரன் குவித்தது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 155 ரன்னில் சுருண்டது. 

171 ரன்கள் முன்னிலையில் 2_வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 2_வது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 140 ரன் எடுத்து இருந்தது. 

அந்த அணி தரப்பில் ரோஜர்ஸ் 73 ரன்னும், பெய்லி 20 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். நேற்று 3_வது நாள் ஆட்டம் நடந்தது. 

இதில் ரோஜர்ஸ் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். 119 ரன்கள் எடுத்து அவர் ஆட்டம் இழந்தார். இது இந்தத் தொடரில் அவர் அடித்த 2_வது சதமாகும். அவர் மெல்போர்ன் டெஸ்டில் 116 ரன் எடுத்து இருந்தார். 

ஆஸ்திரேலிய அணி 276 ரன்னில் ஆல் அவுட் ஆனது. ரோஜர்சுக்கு அடுத்தபடி யாக பெய்லி 46 ரன் எடுத்தது குறிப்பிடத்தக்கது. 

இங்கிலாந்து அணியின் வேகப் பந்து வீச்சாளரான போர்த்விக் 3 முக்கிய விக்கெட்டைக் கைப்பற்றினார். தவிர, ஆண்டர்சன் , பிராட் மற்றும் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். 

இங்கிலாந்து அணி 448 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற கடின  இலக்கை ஆஸ்திரேலிய அணி வைத்தது. 

அடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து அணி ஆஸ்திரேலிய வீரர்களின் அபார பந்து வீச்சால் திணறியது. இதனால் அந்த அணி 51.4 ஓவரில் 166 ரன்னில் சுருண்டது. 

எனவே இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 281 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் ஆஸ்திரேலியா 5_0 என்ற கணக்கில் தொடரை வென்றது. 

இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் கார்பெரி அதிகபட்சமாக 43 ரன் எடுத்தார். ஹாரிஸ் 5 விக்கெட்டும், ஜான்சன் 3 விக்கெட்டும், லியான் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். 

இந்தத் தொடரில் இங்கிலாந்து அனைத்து டெஸ்டிலும் தோற்று ஒயிட் வாஷ் ஆனது. 8 விக்கெட் கைப்பற்றிய ஹாரிஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார். 5 டெஸ்டிலும் சேர்தது 37 விக்கெட் கைப்பற்றிய ஜான்சன் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

ஆஸ்திரேலிய அணி பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்டில் 381 ரன் வித்தியாசத்திலும், அடிலெய்டில் நடந்த 2_வது டெஸ்டில் 218 ரன் வித்தியாசத்திலும் வெற்றி  பெற்றது. 

பின்பு பெர்த் நதகரில் நடந்த 3_வது டெஸ்டில் 150 ரன் வித்தியாசத்திலும், மெல்போர்ன் நகரில் நடந்த 4_வது டெஸ்டில் 8 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று இருந்தது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்