இறந்தவர்களின் உடைமைகளை காட்சிக்கு வைக்கிறது இலங்கை

Image Unavailable

 

கொழும்பு, ஜன, 10 - இலங்கையில் 16 ஆண்டுகளுக்கு முன் விடுதலைப்புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தில், இறந்தவர்களின் உடைமைகளை அந்நாட்டு போலீஸார் காட்சிக்கு வைக்கவுள்ளனர்.

“இறந்தவர்களின் தனிப்பட்ட உடைமைகளை அடையாளம் காண, யாழ்ப்பாணம் நகராட்சி மைதானத்துக்கு வரும் 12 மற்றும் 13ம் தேதிகளில் பொதுமக்கள் வருகை தரவேண்டும்” என்று முதுநிலை காவல் கண்காணிப்பாளர் அஜீத் ரோஹனா கேட்டுக்கொண்டுள்ளார்.

யாழ் தீபகற்பத்தின் பலாலி விமான நிலையத்தில் இருந்து 1998ம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி, 55 பேருடன் விமானம் ஒன்று கொழும்பு நோக்கி புறப்பட்டது. ரஷியாவில் தயாரிக்கப்பட்ட அந்த விமானம் இலங்கையின் லயன் ஏர் நிறுவனத்துக்கு சொந்தமானது. இந்த விமானம் புறப்பட்ட அரை மணி நேரத்தில் ரேடார் கண் காணிப்பில் இருந்து மறைந்தது. இந்நிலையில் விமானம் சுடப்பட்டு கடலில் நொறுங்கி விழுந்ததில், அதில் பயணம் செய்த 2 வெளிநாட்டவர் உள்ளிட்ட 48 பயணிகள் மற்றும் 7 விமான ஊழியர்கள் இறந்தனர்.

வடக்கு இலங்கையை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை ஏ9, அப்போது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்ததால், விமானப் போக்குவரத்து மட்டுமே பயணிகளுக்கு அப்போது ஒரே வாய்ப்பாக இருந்தது. அந்த காலகட்டத்தில் பல விமானங்கள் விடுதலைப் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ள நிலையில், இந்த விமானத்தை மேலிட உத்தரவின் கீழ் சுட்டு வீழ்த்தியதாக, போலீஸ் பிடியில் உள்ள விடுதலைப்புலி ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

“இதில் இறந்த 48 பயணிகளும் தமிழர்கள். விடுதலைப்புலிகளின் பயங்கரவாதம், தங்கள் சமூகத்தி னரையும் விட்டு வைக்க வில்லை என்பதையே இது காட்டுகிறது” என்றார் அஜீத் ரோஹனா. தற்போது உடைமைகளை காட்சிக்கு வைப்பதன் மூலம் இறந்த பயணிகளை அடையாளம் காண முடியும். மேலும் பிடிபட்டவருக்கு எதிரான விசாரணைக்கும் உதவியாக இருக்கும் என்று இலங்கை போலீஸார் கருதுகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ