இந்தியாவுடன் பேச்சு நடத்த நவாஸ் ஷெரீப் விருப்பம்

புதன்கிழமை, 5 பெப்ரவரி 2014      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், பிப், 6 - இந்தியாவுடன் ஆக்கப்பூர்வமான, பயனளிக்கும் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது என்று அந்த நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரி வித்துள்ளார்.

தலைநகர் இஸ்லாமாபாதில் உள்ள தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க் கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

சட்டம்- ஒழுங்கு, உள்நாட்டுப் பாதுகாப்பு ஆகிய மிகப் பெரிய சவால்களை பாகிஸ்தான் எதிர்கொண்டுள்ளது. நாட்டில் அமைதியும் பொருளாதார வளர்ச்சியையும் எட்ட அண்டை நாடுகளுடன் அமைதி நிலவுவது அவசியம்.

தீவிரவாதத்துக்கு எதிரான போர் என்பது மிகச் சிக்கலான விவகாரம். இதனை ஒரு கட்சியோ அல்லது ஓர் அமைப்போ தீர்த்து விட முடியாது. ஒட்டுமொத்த நாடும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகள், அரசு அமைப்புகளிடம் கருத்தொற்றுமை ஏற்பட வேண்டும். ஆப்கானிஸ்தான் நமது மிக முக்கியமான அண்டை நாடு. அந்த நாட்டின் உள்விவகாரங் களில் பாகிஸ்தான் தலையிடாது என்பதை அந்த நாட்டு அதிபர் ஹமீது கர்சாயிடம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளேன். அமைதி யான, நிலையான, ஒன்றுபட்ட ஆப்கானிஸ்தான் அமைவது பாகிஸ்தானின் நலனுக்கு நல்லது.

இந்தியாவுடன் ஆக்கப்பூர்வமான, பயனளிக்கும் பேச்சு வார்த்தை நடத்த நான் எப்போதும் தயாராக உள்ளேன். அண்டை நாடுகளுடன் ஒத்துழைப்பு, நல்லுறவு நீடித்தால்தான் பாகிஸ்தானில் அமைதி, வளர்ச்சியை ஏற்படுத்த முடியும் என்று நவாஸ் ஷெரீப் தெரிவித்தார். கடந்த ஆண்டு இந்திய எல்லையில் அத்துமீறி புகுந்த பாகிஸ்தான் வீரர்கள், 7 இந்திய வீரர்களை கொடூரமாகக் கொலை செய்தனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து இரு நாட்டு அமைதிப் பேச்சுவார்த்தை முடங்கியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: