முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எவ்வித குறைபாடும் இன்றி நிறைவேற்ற வேண்டும் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வேண்டுகோள்

ஞாயிற்றுக்கிழமை, 29 மே 2011      தமிழகம்
Image Unavailable

மதுரை,மே.- 29 - தமிழக முதல்வரின் இலவச அரிசி திட்டத்தை எவ்வித குறைபாடும் இன்றி நிறைவேற்ற வேண்டும் என்று மதுரையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கேட்டுக்கொண்டுள்ளார்.   மதுரையில் அரசு சுற்றுலா மாளிகை கூட்ட அரங்கில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில்  கூட்டுறவுத்துறை அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் (பொறுப்பு) முருகேஷ் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது, தமிழக முதல்வர் ஏழை, எளிய மக்களின் நலன் கருதி வரலாற்று சிறப்புமிக்க திட்டமான இலவச அரிசி வழங்கும் திட்டத்தினை கொண்டு வந்துள்ளார். பொதுமக்கள், தமிழக முதல்வர் தலைமையில் அமைந்துள்ள அரசு மீது மிகுந்த எதிர்பார்ப்பையும், நம்பிக்கையும் வைத்துள்ளனர். கூட்டுறவுத்துறை மூலமாக நியாயவிலைக்கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் தரமானதாக இருக்க வேண்டும். நியாயவிலைக்கடைகள் காலதாமதமின்றி காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை திறக்கப்பட்டு இருக்க வேண்டும். நியாயவிலைக்கடையில் பணியாளரை தவிர வெளியாட்கள் யாரும் பணியில் இருக்க கூடாது. அறிவிப்பு பலகையில் கடையில் உள்ள பொருட்களின் இருப்பு பட்டியலை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் எல்லா கடைகளிலும் எழுதி வைக்க வேண்டும்.
    அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் வருகிற 1.6.2011 முதல் இலவச அரிசியை மாதத்தில் எப்போது  வேண்டுமானாலும் அனைத்து வேலை நாட்களிலும் மாதந்தோறும் வழங்க வேண்டும். பொருட்களுக்கு பில் போடும்போது டபுள் கார்பன் உபயோகப்படுத்த வேண்டும். ஒதுக்கீட்டின் படி பொருட்கள் எடுக்கப்பட்டு இருப்பு வைத்திருக்க வேண்டும். இதில் எவ்வித குறைபாடுகளோ, குளறுபடிகளோ வந்து விடக்கூடாது.
    பாண்டியன் கூட்டுறவு சிறப்பு அங்காடி மற்றும் நமது கூட்டுறவுத்துறையின் மூலமாக இயங்கும் சிறப்பு அங்காடிகளில் பொதுமக்கள் விரும்பும் பொருட்களை வாங்கி விற்பனை செய்யவேண்டும். விவசாயிகளுக்கு பயிர்கடன் வழங்கும்போது உண்மையிலேயே உரியவர்களுக்கு சென்றடையும் வகையில் வழங்கவேண்டும். புதிய உறுப்பினர்களுக்கும் பயிர்கடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் இருப்பு வைத்திருக்கவேண்டும். கூட்டுறவுத்துறை அலுவலர்கள் நமது அரசுக்கும், துறைக்கும் பெருமை சேர்க்கும் வகையில் பணியாற்றி திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திடவேண்டும். தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள மகத்தான திட்டமான இலவச அரிசித்திட்டத்தை எவ்வித குறைபாடும் இன்றி செயல்படுத்திட அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
    இக்கூட்டத்தில் திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் எம்.முத்துராமலிங்கம், மாமன்றக்குழு தலைவர் பெ.சாலைமுத்து, கூட்டுறவு இணைப்பதிவாளர் கே.வி.எஸ்.குமார், மதுரை மத்திய கூட்டறவு வங்கி தனி அலுவலர் ஆரோக்கியசுகுமார், மாவட்ட வழங்கல் அலுவலர் சரஸ்வதி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.அண்ணா, கூட்டுறவுத்துறை துணை பதிவாளர்கள், குடிமைப்பொருள் வட்டாட்சியர்கள் மற்றும் அலுவலர்கள், ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்