ஐ.பி.எல். 43 ரன் வித்தியாசத்தில் பெங்களூர் அணி மும்பையை தோற்கடித்து இறுதிக்கு நுழைந்தது

ஞாயிற்றுக்கிழமை, 29 மே 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, மே.- 29 - சென்னையில் நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 2வது அரையிறுதி ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 43 ரன்கள் வித்தியசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு நுழைந்தது. இறுதி ஆட்டத்தில் இந்த அணி, சென்னை அணியுடன் மோதுகிறது. ஐ.பி.எல் கிரிக்கெட்டில் இறுதிப்போட்டிக்கான 2​வது தகுதி சுற்றில் மும்பை இந்தியன்ஸ்​பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் மோதின. டாஸ் ஜெயித்த மும்பை கேப்டன் தெண்டுல்கர் முதலில் பந்து வீச முடிவு செய்தார்.
இதை தொடர்ந்து கிறிஸ் கெய்லும், அகர்வாலும் பெங்களூர் அணியின் இன்னிங்சை தொடங்கினர். மும்பை வேகப்பந்து வீச்சாளர் அபுநெசிம் அகமது வீசிய முதல் ஓவரிலேயே கெய்ல் அதிரடி வேட்டை நடத்தினார். இதில் இவர் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசிய, வைடுடன் எக்ஸ்டிரா வகையில் கிடைத்த பவுண்டரியையும் சேர்த்து 27 ரன்களை அந்த ஓவரில் மட்டுமே திரட்டினார். ஐ.பி.எல்.​ல் முதல் ஓவரில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.
ஆனால் எல்லா பந்துகளையும் அடித்து விளையாட வேண்டும் என்பதை தவிர்த்து, கணித்து கெய்ல் விளையாடினார். குறிப்பாக மலிங்காவின் யார்க்கர் பந்து வீச்சை சாதுர்யமாக சமாளித்தார். இவருக்கு மறுமுனையில் நின்ற அகர்வாலும் அதிரடி காட்டினார். இவர்களை கட்டுப்படுத்த வழிதெரியாமல் மும்பை கேப்டன் தெண்டுல்கர் உண்மையிலேயே விழிபிதுங்கி போனார். சிக்சரும், பவுண்டரியுமாக ஓடியதால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. 9 ஓவர்களில் பெங்களூர் அணி 100 ரன்களை எட்டியது.
அணியின் ஸ்கோர் 113 ரன்களை எட்டிய போது ஒரு வழியாக இந்த ஜோடி பிரிந்தது. அகர்வால் 41 ரன்களில் (31 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) பிடிகொடுத்து வெளியேறினார். சிறிது நேரத்தில் கெய்லும் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 11 ரன்களில் தனது 3​வது சதத்தை தவற விட்ட கெய்ல் 89 ரன்களுடன் (47 பந்து, 9 பவுண்டரி, 5 சிக்சர்) பெவிலியன் திரும்பினார். இத்துடன் சேர்த்து அவர் இந்த தொடரில் 608 ரன்கள் குவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
கெய்லின் வெளியேற்றத்திற்கு பிறகு இறுதி கட்டத்தில் பெங்களூர் சொதப்பி விட்டது. அடுத்த 4 ஓவர்களில் பந்து ஒரு முறை கூட எல்லைக்கோட்டை தொடவில்லை. 200 ரன்களை எளிதாக கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட பெங்களூர் அணி, கடைசியில் ரன்களை திரட்ட தவறி விட்டது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பெங்களூர் அணி 4 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் குவித்தது. கடைசி 5 ஓவர்களில் வெறும் 35 ரன்களே எடுக்கப்பட்டன. மும்பை தரப்பில் முனாப்பட்டேல் 2 விக்கெட்டுகளும், பொல்லார்ட், அகமது ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
அடுத்து 186 ரன்கள்  எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணிக்கு எந்த ஒரு பேட்ஸ்மேனும் கைகொடுக்கவில்லை. கேப்டன் தெண்டுல்கர் அதிகபட்சமாக 40 ரன்கள் (24 பந்து, 7 பவுண்டரி) எடுத்தார். அவரை தவிர மற்ற யாரும் 20 ரன்களை கூட தாண்டவில்லை. மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்த மும்பை அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 142 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 43 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி அபார வெற்றி பெற்று, 2​வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இதே மைதானத்தில் இறுதி ஆட்டம் நடக்கிறது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பெங்களூர்  அணி எதிர்கொள்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்: