முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா: அரையிறுதிக்குத் தகுதி

சனிக்கிழமை, 29 மார்ச் 2014      விளையாட்டு
Image Unavailable

 

டாக்கா,மார்ச்.30  - டி20 உலகக் கோப்பையில் இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நேற்று நடந்த போட்டியில் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது.

தொடந்து 3 போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம், டி20 உலகக் கோப்பையின் அரையிறுதிக்கு இந்திய அணி தகுதிபெற்றுள்ளது. ஆட்டநாயகனாக சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

139 ரன்கள் வெற்றி இலக்குடன் தனது ஆட்டத்தைத் ஆரம்பித்த இந்திய அணி ஆரம்பத்திலேயே ஷிகர் தவானை இழந்தது. அல் அமின் ஹுசைன் பந்தில், ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்த நிலையில் தவான் ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய கோலியுடன் கைகோர்த்த மற்றொரு துவக்க வீரர் ரோஹித் சர்மா, வங்கதேசத்தின் பந்துவீச்சை எளிதாக எதிர்கொண்டார். கோலியும் எந்த வித கடினமும் இன்றி ரன் சேர்ப்பில் ஈடுபட்டார். 39 பந்துகளில் ரோஹித் சர்மாவும், 41 பந்துகளில் விராட் கோலியும் அரை சதத்தை எட்டினர். 56 ரன்களுக்கு ரோஹித் சர்மா ஆட்டமிழந்த நிலையிலும், இந்திய அணிக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாகவே இருந்தது.

அணியின் ஸ்கோர், வேகமாக உயர 18.3 ஓவர்களில் இந்தியா 2 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து, வெற்றி இலக்கை தொட்டது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த கோலி 57 ரன்கள் எடுத்திருந்தார். கேப்டன் தோனி 22 ரன்கள் எடுத்திருந்தார்.

ஏற்கனவே இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றிருந்ததால், இந்த வெற்றியின் மூலம் அரையிறுதிக்கான இடத்தை இந்திய அணி உறுதி செய்தது.

முன்னதாக டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார். புவனேஷ்வர் குமார் வீசிய முதல் ஓவரிலேயே மூன்று பவுண்டரிகள் அடித்தாலும் அடுத்தடுத்த ஓவர்களில் சிறப்பான பந்துவீச்சால், வங்கதேச அணியின் ரன் சேர்ப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

13 ஓவர்கள் முடிவில் 82 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வங்கதேசம் இழந்திருந்தது. நாசிர் ஹுசைன் மற்றும் மஹமதுல்லா இணை அணியின் ஸ்கோரை உயர்த்த பாடுபட்டனர். இவர்களின் ஆட்டத்தால் வங்கதேசம் 130 ரன்களைக் கடந்தது. அமித் மிஷ்ரா வீசிய கடைசி ஓவரில் நாசிர் ஹுசைன் 16 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

முடிவில் வங்கதேசம் 138 ரன்களுக்கு 7 விக்கெட்டுகள் இழந்து தனது இன்னிங்ஸை முடித்தது. அதிகபட்சமாக அனாமுல் ஹக் 44 ரன்கள் எடுத்தார். இந்திய அணியின் சார்பில் மிஸ்ரா மூன்று விக்கெட்டுகளும், அஸ்வின் இரண்டு விக்கெட்டுகளும், புவனேஷ்வர் மற்றும் ஷமி தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்