முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மியாமி மாஸ்டர்ஸ்: ஜோகோவிச்க்கு சாம்பியன் பட்டம்

செவ்வாய்க்கிழமை, 1 ஏப்ரல் 2014      விளையாட்டு
Image Unavailable

 

மியாமி, ஏப்.2 - மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். 

அமெரிக்காவின் மியாமி நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிச்சுற்றில் உலகின் 2-ம் நிலை வீரரான நோவக் ஜோகோவிச் 6-3, 6-3 என்ற நேர் செட்களில் உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடாலைத் தோற்கடித்தார். 

ஜோகோவிச்சை எதிர்த்து விளையாடவிருந்த ஜப்பானின் நிஷிகோரி உள்ளிட்ட இரு வீரர்கள் காயம் காரணமாக விலகிய நிலையில், இந்த முறை ஒரு செட்டைக்கூட இழக்காமல் சாம்பியன் ஆகியுள்ளார். இந்தப் போட்டியில் கடந்த 4 ஆண்டுகளில் ஜோகோவிச் வென்ற 3-வது பட்டம் இது. ஒட்டுமொத்தத்தில் அவர் வென்ற 4-வது மியாமி மாஸ்டர்ஸ் பட்டமாகும். 2007-ல் முதல்முறையாக மியாமி மாஸ்டர்ஸில் சாம்பியன் பட்டம் வென்ற ஜோகோவிச், அதன்பிறகு 2011, 2012 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் ஆனார். 

இரண்டு வாரங்களில் ஜோகோவிச் வென்ற 2-வது ஏடிபி மாஸ்டர்ஸ் பட்டம் இது. கடந்த வாரம் இன்டியன்வெல்ஸ் மாஸ்டர்ஸில் அவர் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது. 

வெற்றி குறித்துப் பேசிய ஜோகோவிச், “நான் சிறப்பாக ஆடினேன். அனைத்து விஷயங்களும் சரியாக அமைந்தன. அதனால் நடால் சரிவிலிருந்து மீள்வதற்கு நான் வாய்ப்பு கொடுக்கவில்லை. இந்த வெற்றி எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்துள்ளது” என்றார். 

அதேநேரத்தில் 13 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றவரான நடால், மியாமி மாஸ்டர்ஸில் பட்டம் வெல்ல இன்னும் ஓர் ஆண்டு காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 2008, 2009, 2011 மற்றும் இந்தாண்டில் மியாமி மாஸ்டர்ஸில் இறுதிச்சுற்று வரை முன்னேறிய நடால், இதுவரை ஒருமுறைகூட பட்டம் வெல்லவில்லை. 

மகளிர் இரட்டையர் பிரிவில் ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டின் ஹிங்கிஸ்-ஜெர்மனியின் சபைன் லிசிக்கி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த ஜோடி 4-6, 6-4, 10-5 என்ற செட் கணக்கில் ரஷியாவின் எக்டெரினா மகரோவா-எலினா வெஸ்னினா ஜோடியைத் தோற்கடித்தது. 1995 முதல் 2007 வரையிலான காலத்தில் 37 டபிள்யூடிஏ பட்டங்கள் வென்றிருந்தார் ஹிங்கிஸ். இப்போது மியாமி மாஸ்டர்ஸில் சாம்பியன் ஆனதன் மூலம் அவர் வென்ற பட்டங்களின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்