முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தயாளு - ராசா - கனிமொழி மே 26-ல் ஆஜராக சம்மன்

வெள்ளிக்கிழமை, 2 மே 2014      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, மே 3 - கலைஞர் டிவிக்கு ரூ. 214 கோடி கைமாறிய விவகாரம் தொடர்பாக தயாளு அம்மாள், ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 19 பேரும் மே 26-ல் ஆஜராகுமாறு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. 

அமலாக்கப்பிரிவு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ஏற்றுக் கொண்ட டெல்லி சிறப்பு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 

திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு, மகள் கனிமொழி, முன்னாள் அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்ட 10 பேர் மீதும், கலைஞர் டிவி உள்ளிட்ட 9 நிறுவனங்கள் மீதும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் 25-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். 

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் வழக்கு டெல்லி பாட்டியாலா ஹவுசில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. 

இந்த வழக்கில் கலைஞர் டிவிக்கு ஸ்வான் டெலிகாம் நிறுவனம் தனது கிளை நிறுவனங்கள் வழியாக ரூ.214 கோடி லஞ்சம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த பணப் பரிமாற்றம் சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வருவதால், அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தனியாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

இந்நிலையில் இப்பிரிவு சார்பில், சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி முன்பு ஏப் 25-ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 

குற்றப்பத்திரிகையில், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்பி கனிமொழி, திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு, உறவினர் அமிர்தம், ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தைச் சேர்ந்த ஷாகித் பல்வா, வினோத் கோயங்கா, குசேகான் பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறுவனத்தின் இயக்குநர்கள் ஆசிஃப் பல்வா, ராஜீவ் அகர்வால், பாலிவுட் தயாரிப்பாளர் கரீம் மொரானி, கலைஞர் டிவி முன்னாள் நிர்வாக இயக்குநர் சரத்குமார் ஆகிய 10 பேர் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளனர். 

இதுதவிர, ஸ்வான் டெலிகாம், கலைஞர் டிவி, சினியுக் மீடியா, டி.பி. ரியால்டி உள்ளிட்ட 9 நிறுவனங்கள் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப் பட்டுள்ளன. இந்த நிறுவனங்கள் வழி யாக கலைஞர் டிவிக்கு லஞ்சமாக ரூ.214 கோடி தரப்பட்டுள்ளது. ஆனால், இந்தப் பணம் கடனாக வாங்கியது போலவும், அதை திருப்பித் தந்துவிட்டது போலவும் ஆவணங்களில் காட்ட முயன்றுள்ளனர். இவை இரண்டுமே சட்ட விரோதமானவை என்று குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. 

இந்த குற்றப்பத்திரிகையை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம், ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 19 பேருக்கும் சம்மன் அனுப்பியுள்ளது. 

நாட்டுக்கு மிகப் பெரிய இழப்பை ஏற்படுத்திய ஊழல்தான் ஸ்பெக்ட்ரம் ஊழலாகும். அதாவது ரூ. 1.76 லட்சம் கோடி அளவுக்கு இந்த ஊழல் மூலம் இழப்பு ஏற்பட்டதாக தணிக்கை துறை அதிகாரி குற்றம் சாட்டியிருந்தார். அதன் பிறகுதான் இந்த முறைகேடு பற்றிய தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்தன. கலைஞர் டிவிக்கு ரூ. 214 கோடி கைமாறிய விவகாரமும் வெளிச்சத்துக்கு வந்தது. 

இந்த ஊழல் தொடர்பாக முதலில் ஆ. ராசாதான் கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி கைது செய்யப்பட்டு அதே திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் 7 மாதங்கள் கழித்து அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அதன் பிறகு படிப்படியாக ஆ. ராசா உள்ளிட்ட  அனைவரும் நிபந்தனை ஜாமீனில் விடுதலையானார்கள். இந்த நிலையில்தான் கடந்த மாதம் 25ம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த குற்றப்பத்திரிகை 4 ஆயிரம் பக்கங்களுக்கு மேல் கொண்டதாகும். 

அதில் ஆ. ராசா, கனிமொழி உள்ளிட்டோர் மிகப் பெரிய குற்றம் இழைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவர்களுக்கு 3 ஆண்டு முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் நேற்று சிபிஐ நீதிமன்றத்தில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கனிமொழி, ஆ. ராசா, தயாளு அம்மாள், சரத்குமார் ரெட்டி, அமிர்தம், சாகித் பால்வா உள்ளிட்ட 10 பேர் மே 26ம் தேதி கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இது தொடர்பாக அவர்களுக்கு சம்மன் அனுப்பப்படவுள்ளது. அதன் பிறகு இவர்கள் மீண்டும் கைது ஆவார்களா என்பது தெரியவரும். அது பற்றி நீதிபதி முடிவு செய்வார் என்று நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஊழல் வழக்கில் 10 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ள விவகாரம் திமுக மேலிடத்தில் ஒரு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. காரணம், தயாளு அம்மாள் வயதானவர். ஏற்கனவே அவர் உடல்நலத்தை காரணம் காட்டி விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தார். பிறகு அதிகாரிகள் வந்து அவரிடம் விசாரித்து விட்டு சென்றனர். இப்படிப்பட்ட சூழலில் தயாளு உட்பட 10 பேருக்கு சம்மன் என்ற செய்தி திமுக வட்டாரத்தில் திகிலை ஏற்படுத்தி உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்