திருப்பரங்குன்ற முருகன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

சனிக்கிழமை, 4 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

திருப்பரங்குன்றம்,ஜூன்.5 - முருகப் பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நாளை காலை 6.45 மணி முதல் 7.15 மணிக்குள் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. 2011 ல் அ.தி.மு.க. ஆட்சி அமைந்த பின்னர் நடக்கும் முதல் ஆன்மீக வைபவ நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழ்க்கடவுளான முருகப் பெருமான் குடிகொண்டுள்ள அறுபடை வீடுகளுல் முதல் படை வீடு எனும் சிறப்பு பெற்றது திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலாகும். இந்த திருக்கோயிலில் கடந்த 2000 ம் ஆண்டு ஜூன் மாதம் 11 ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோயில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்பது ஆகம விதி. அதன்படி திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. கோயிலில் ரூ. 5 கோடி செலவில் மராமத்து திருப்பணிகள் செய்யவும், ஜூன் 6 ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. இதற்காக 2010 அக்டோபர் 29 ம் தேதி பாலாலயம் நடத்தப்பட்டது. 

அதனை தொடர்ந்து கோயிலுக்குள் சுவாமி சிலைகள், மண்டபங்கள், ராஜகோபுரம், வல்லப கணபதி மற்றும் கோவர்த்தனாம்பிகை, விமானங்களில் மேல் பகுதியில் முதல் முறையாக கமலம் வரையப்பட்டுள்ளது. மூலஸ்தானத்தில் பக்தர்களின் வசதிக்காக ஏ.சி. பொருத்தப்பட்டுள்ளது. கம்பத்தடி மண்டபத்தில் சுழலும் லிங்கமும், ஆஸ்தான மண்டபத்தில் சுழலும் நந்தியும், லிங்கமும் கலை நயத்துடன் வரையப்பட்டுள்ளது. 7 நிலைகள், 150 அடி உயரம் கொண்ட ராஜகோபுரம் பழுது நீக்கப்பட்டு வர்ணம் தீட்டி கம்பீரமாக காட்சியளிக்கிறது. கோயிலின் மேல் தளத்தில் 60 ஆண்டுகளுக்கு பின்னர் தட்டு ஓடு புதிதாக பதிக்கப்பட்டுள்ளது. 

கும்பாபிஷேகத்திற்கு முன் நிகழ்ச்சியாக கடந்த 2 ம் தேதி மாலையில் முதல் கால யாகசாலை பூஜைகள் துவங்கின. ஸ்தானிக பட்டர்களான ராஜா சந்திரசேகர் தலைமையில், சுவாமிநாதன், சொக்கு சுப்பிரமணியன், சண்முகசுந்தரம், ரமேஷ், சிவா, செல்லா உட்பட தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் இருந்து 450 சிவாச்சார்யார்கள், 35 ஓதுவார்கள் மற்றும் திருப்பரங்குன்றம் ஸ்கந்தகுரு வித்யாலயம் வேதசிவாகம் பாடசாலை மாணவர்கள் ஆகியோர் யாகசாலை பூஜைகளில் பங்கேற்றனர். 

கும்பாபிஷேக தினமான நாளை அதிகாலை 4.30 மணிக்கு எட்டாம் கால யாகசாலை பூஜைகள் நடக்கிறது. காலை 6 மணிக்கு யாகசாலை பூஜைகள் பூர்த்தி செய்யப்பட்டு மகா தூப தீபாராதனைகள் நடக்கிறது. அதனை தொடர்ந்து யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய குடங்கள் புறப்பாடாகி ராஜகோபுரம், விமானங்களுக்கு சிவாச்சார்யார்களால் காலை 6.45 மணி முதல் 7.15 மணிக்குள் ராஜகோபுரத்தில் உள்ள ஏழு கலசங்கள் மற்றும் கோவர்த்தனாம்பிகை, வல்லப கணபதி விமானங்களின் கலசங்களில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. அதனை தொடர்ந்து கோயிலுக்குள் மூலவர்கள், பரிவார மூர்த்திகளுக்கு புனித நீர் மூலம் மகா அபிஷேகம் நடைபெறுகிறது. அதன் பின்னர் மகாதூப தீபாராதனைகள் நடக்கிறது. 

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மலை மேல் காசி விஸ்வநாதர் கோயில், தர்ஹா, நெல்லித்தோப்பு, புதிய படிக்கட்டு பகுதிகளிலும் சரவண பொய்கையிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாவட்ட போலீஸ் எஸ்.பி. அஸ்ராகார்க் தலைமையில் இரண்டு ஏ.டி.எஸ்.பிக்கள், 5 டி.எஸ்.பிக்கள், 42 இன்ஸ்பெக்டர்கள், 150 எஸ்.ஐக்கள், 500 போலீசார்கள் பாதுகாப்பு பணியில் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: