முக்கிய செய்திகள்

துபாயிலிருந்து விமானம் மூலம் ரூ.3 கோடி மதிப்புள்ள 15 கிலோ தங்கம் கடத்தல்

திங்கட்கிழமை, 6 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.- 6 - துபாயில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் ரூ. 3 கோடி மதிப்புள்ள தங்க பிஸ்கெட்களை ஷூ சாக்சில் மறைத்து கடத்தி வந்த கர்நாடகாவை சேர்ந்த 4 பேரை சுங்க அதிகாரிகள் கைது செய்தனர். துபாயில் இருந்து சென்னை பன்னாட்டு விமான நிலையத்துக்கு வரும் விமானங்களில் தங்கக் கட்டிகள் கடத்தப்படுகிறது என்று சென்னையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு தகவல்கள் வந்தன. கூடுதல் இயக்குனர் ராஜன் உத்தரவின்பேரில், சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சில தினங்களாக துபாயில் இருந்து சென்னை வரும் விமானங்களை தீவிரமாக கண்காணித்து வந்தனர். நேற்று அதிகாலை 3.30 மணிக்கு துபாயில் இருந்து ஏர் இந்தியா விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதித்து அனுப்பிக்கொண்டு இருந்தனர். அப்போது கர்நாடகாவை சேர்ந்த 3 பேரை அதிகாரிகள் சோதனையிட்டனர். அவர்களது நடவடிக்கைகள் சந்தேகப்படும்படி இருநதது. இதையடுத்து, விமான நிலையத்தில் உள்ள தனி அறைக்கு அவர்களை அழைத்துச் சென்றனர். உடைகளை கழற்றி அவர்களை சோதித்தனர். மூவரும் அணிந்து இருந்த ஷூ சாக்சில் கால்முட்டியில் 16 பண்டல்களை கட்டி செல்லோ டேப் மூலம் ஓட்டி எடுத்து வந்துள்ளனர். அந்த பண்டல்களில் செயின்கள், வளையல்கள் மற்றும் ஏராளமான தங்கக் கட்டிகளை பதுக்கி வைத்திருந்தனர். அவர்களிடம் இருந்து 12 கிலோ தங்கக் கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு ரூ. 2.5 கோடி.

மூவரையும் தனி அறையில் வைத்து அதிகாரிகள் விசாரித்தனர். பின்னர் இவர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் கர்நாடகாவை சேர்ந்தவர்கள். அவர்கள் அப்துல் நசீர் ஜலாவுதீன், முகமது ஆரிஃப், முகமது இம்ரான். மேலும் இவர்களின் கடத்தலுக்கு பின்னணியில் உள்ளவர்கள் பற்றியும் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இதே போல் நேற்று காலை 9 மணிக்கு துபாயில் இருந்து வந்த எமிரேட்ஸ் விமானத்திலும் தங்க பிஸ்கெட் கடத்தி வந்த கர்நாடகா மாநிலம் பட்கல் பகுதியை சேர்ந்த ஷமீர் அகமது  என்பவரை அதிகாரிகள் கைது செய்தனர். அவரது ஷூ சாக்சில் இருந்து ரூ. 50 லட்சம் மதிப்புள்ள 3 1/2 கிலோ தங்க பிஸ்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். 

மேலும் கொழும்பிலிருந்து ஜெட் ஏர்வேஸ் மூலம் சென்னைக்கு 3760 (2 ஜி.பி.) மெம்ரி கார்டுகளை கடத்தி வந்த ராஜேந்திரா மற்றும் சிலம்புகுமார் ஆகிய இருவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவற்றின் மதிப்பு 8 லட்சத்து 50 ஆயிரம் ஆகம். மேற்கண்ட தகவல்களை செய்தியாளர்களுக்கு தெரிவித்த சுங்கத்துறை ஆணையர் சஞ்சய்குமார் அகர்வால் கடந்த 10 ஆண்டுகளில் 15 கிலோ தங்கம் மொத்தமாக பிடிப்பட்டது. இதுதான் முதல் தடவை என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: