முக்கிய செய்திகள்

மதுரை கலெக்டரின் அதிரடி நடவடிக்கையால் மனு நீதி நாளில் குவியும் மக்கள் கூட்டம்

செவ்வாய்க்கிழமை, 7 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,ஜூன்.- 7 - மதுரை மாவட்ட கலெக்டரின் அதிரடி நடவடிக்கையால் மனு நீதி நாளில் மக்கள் குவிகிறார்கள். நேற்று ஒரே நாளில் மட்டும் 500 பேர் மனு கொடுத்தனர்.    தமிழகத்தில் உள்ள கலெக்டர் அலுவலகங்களில் வாரத்தில் முதல் நாளான திங்கட்கிழமை மனு நீதி நாள் முகாம் நடைபெறுவது வழக்கம். அன்று பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக கொடுப்பார்கள். மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் அதற்கு ரசீதும் கொடுக்க வேண்டும். கோரிக்கை நிறைவேற்றாவிட்டால் இந்த ரசீதை வைத்து மீண்டும் மனு செய்யலாம். கடந்த திமுக ஆட்சியில் நடந்த மனு நீதி நாள் முகாமில் கலெக்டர்கள் நேரடியாக வந்து மனு வாங்குவதில்லை.  மற்ற அதிகாரிகளே மனுக்களைவாங்குவார்கள். இதற்கு சரியான பதிலையும் அவர்கள் தெரிவிப்பதில்லை. ஆனால் அதிமுக பதவி ஏற்றதும் நடைபெறும் மனு நீதி நாள் முகாமில் கலெக்டர்களே நேரிடையாக அமர்ந்து மனுக்களை வாங்குவதோடு அதிகாரிகளுக்கும் அந்த இடத்திலேயே உத்தரவிடுகிறார்கள். மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம் தான் பதவி ஏற்ற நாளில் இருந்தே அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தினந்தோறும் மதுரை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பகுதிகளுக்கும் சென்று திடீர் ஆய்வில் ஈடுபடுகிறார். அங்குள்ள குறைகளை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார். 

   மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் மனு நீதி நாளில் கலெக்டர் சகாயம் காலையில் இருந்து மதியம் வரை அமர்ந்திருந்து ஒவ்வொரு மனுக்களையும் வாங்கி படித்து பார்த்து மனுதாரர் முன்னிலையிலேயே அதிகாரிகளை அழைத்து கோரிக்கைகளை முடித்து கொடுக்கும் படி உத்தரவிடுகிறார். இந்த நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் நாளுக்குநாள் மனு நீதி நாளில் கூட்டம் அலைமோதுகிறது. மனு நீதி நாளான நேற்று ஒரே நாளில் 500க்கும் மேற்பட்டோர் மனு கொடுத்தனர். ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்துநின்று மனுக்களை கொடுத்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கலெக்டர் சகாயம் மேலூர் பகுதியில் ஆய்வில் ஈடுபட்ட போது கெங்குவார்பட்டியில் வேலை செய்து  கொண்டிருந்த 95 வயது மூதாட்டி  ஏலம்மாள் என்பவரை பார்த்து கலெக்டர் பொன்னாடை போர்த்தினார். அவரிடம் மனு நீதி நாளுக்கு வருமாறு கேட்டுக்கொண்டார். அதன் படி அவர்  நேற்று மதுரை கலெக்டர் அலுவலகம் வந்து கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தார். அப்போது இந்த தள்ளாத வயதிலும் உழைத்து சாப்பிடும் தங்களை பாராட்டுவதாக கூறி அவருக்கு முதியோர்  உதவித்தொகை வழங்க உத்தரவிட்டார்

இதை ஷேர் செய்திடுங்கள்: