நித்யானந்தாவின் 3 சீடர்கள் கைது

Nithyananda2

 

பெங்களூர்,பிப்.26 - நடிகை ரஞ்சிதாவுடன் இணைந்து வெளியான ஒரு வீடியோ காட்சி காரணமாக கடந்த ஆண்டு சுவாமி நித்யானந்தா கைது செய்யப்பட்டார். ஜாமீனில் வெளியே வந்த அவர் தற்போது பெங்களூர் மைசூர் சாலையில் உள்ள தியான பீடத்தில் தங்கி இருந்து ஆன்மீக பணிகளில் ஈடுபட்டு வருகிறார். 

நித்யானந்தா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக மாநில குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். தியான பீடத்திற்கு வரும் பெண் பக்தர்களிடம் ஒரு ஒப்பந்தம் செய்யப்படுவதுண்டு. 

இந்த ஒப்பந்தத்தில் நித்யானந்தாவின் செயலாளர் தனசேகரனின் மனைவி மாசாதனந்தா கையெழுத்து போட்டுள்ளதாக தெரிகிறது. ரகசிய ஒப்பந்தங்களில் கையெழுத்து போட்டிருப்பது மாசாதனந்தா தான் என்பதை உறுதி செய்து கொள்ள குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்தனர். இதற்காக நித்யானந்தாவின் தியான பீடத்திற்கு சென்ற அவர்களுக்கும், நித்யானந்தாவின் சீடர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இதில் நித்யானந்தாவின் சீடர் தயானந்தா கை முறிந்தது. இதற்கிடையே மாசாதனந்தா காரில் ஏறி பறந்து சென்று விட்டார். அவர் எங்கு சென்றார் எனத் தெரியவில்லை. 

இதையடுத்து மாநில குற்றப்பிரிவு போலீசார் பிடதி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இதையடுத்து பிடதி போலீசார் ஆசிரமத்துக்கு சென்று நித்யானந்தாவின் சீடர்கள் 3 பேரை கைது செய்து விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். கைதான 3 பேரும் தியான பீடத்தின் நிர்வாகிகள் ஆவர். போலீசார் தியான பீடத்தையும், நிர்வாகிகளையும் குறி வைத்து செயல்படுவதாக நித்யானந்தாவின் ஆதரவாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் போலீசாரின் செயல்பாட்டை கண்டித்து நித்யானந்தாவின் சீடர்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ