முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவின் பிரபல ஓவியர் எம்.எப்.ஹுசேன் மரணம்

வியாழக்கிழமை, 9 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஜூன் 10 - இந்தியாவின் பிக்காசோ என்று அழைக்கப்பட்டுவந்த பிரபல ஓவியர் எம்.எப்.ஹுசேன் நேற்று லண்டனில் காலமானார். இந்தியாவின் பிரபல ஓவியர் எம்.எப்.ஹூசேன் பல்வேறு புகழ்பெற்ற ஓவியங்களை வரைந்து சர்வதேச அளவில் புகழ்பெற்றவர். இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இந்து தெய்வங்களை அவமதித்து ஓவியம் தீட்டியிருந்தார். இதற்கு இந்தியாவில் உள்ள பல்வேறு இந்து அமைப்புகள் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்தன. இதையடுத்து ஓவியர் ஹுசேன் கடந்த 2005 ஆம் ஆண்டு இந்தியாவை விட்டு வெளியேறி துபாயில் தஞ்சமடைந்தார். சமீபத்தில் இவருக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அவர் லண்டனில் உள்ள ராயல் ப்ராம்டன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. ஹூசேனுக்கு வயது 95 என்பது குறிப்பிடத்தக்கது. 

ஹுசேனின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மன்மோகன்சிங், ஹுசேனின் மறைவு இந்தியாவிற்கு பேரிழப்பு என்று தெரிவித்துள்ளார். ஹுசேனுடன் நெருக்கமான தொடர்பு வைத்திருந்த கிஷன் கன்னா, அஞ்சலி எலா மேனன் போன்ற பிரபலங்கள் தங்களது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ளனர். அவர் மருத்துவமனையில் இருந்தார் என்று நான் கேள்விப்பட்டேன். ஆனால் அவர் மறைந்துவிட்டார் என்ற செய்தி இப்போது எனக்கு கிடைத்துள்ளது. இது மிகவும் துயரமான செய்தியாக இருக்கிறது என்று கிஷன் கன்னா கூறினார். 

ஹுசேன் எனக்கு மிகமிக நெருக்கமான நண்பர். 1954 ஆம் ஆண்டு ஹுசேன் தனது முதலாவது ஓவிய கண்காட்சியை நடத்தியபோதிருந்தே அவரை எனக்கு தெரியும் என்றும் கிஷன் கன்னா கூறினார். கிஷன் கன்னாவும் ஒரு புகழ்பெற்ற ஓவியர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்