முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2ஜி விவகாரத்தில் சி.பி.ஐ. வலையில் மேலும் பல முக்கிய புள்ளிகள் சிக்குகிறார்கள்

ஞாயிற்றுக்கிழமை, 12 ஜூன் 2011      ஊழல்
Image Unavailable

புதுடெல்லி,ஜூன்.- 13 - ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் சி.பி.ஐ வலையில் மேலும் பல முக்கிய புள்ளிகள் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  நாட்டுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்திய ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் தொடர்பாக தொலைத் தொடர்பு துறையின் முன்னாள் அமைச்சர் ஆ. ராசா மற்றும் அவரது செயலாளர்கள் ஆர்.கே. சந்தோலியா, சித்தார்த்த பெகுரா உட்பட 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிறகு தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் மகள் கனிமொழி, கலைஞர் டி.வியின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு ராசா அடைக்கப்பட்டுள்ள அதே திகார் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் பல நிறுவனங்களின் முக்கிய அதிகாரிகளும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கின் பிரதான குற்றவாளியாக கருதப்படும் ஆ. ராசா, கடந்த பிப்ரவரி 2 ம் தேதி சி.பி.ஐ. ஆல் கைது செய்யப்பட்டார். கருணாநிதி மகள் கனிமொழி கடந்த மே 13 ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் சி.பி.ஐ. துருவித் துருவி விசாரணை நடத்தி வருகிறது. சுப்ரீம் கோர்ட் இந்த வழக்கை நேரடியாக கண்காணிப்பதால் சி.பி.ஐ. தற்போது தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சி.பி.ஐ. வலையில் மேலும் பல முக்கிய புள்ளிகள் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் பல்வேறு நிறுவனங்களை சேர்ந்த முக்கிய அதிபர்கள் ஆவர். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முதல் முதலில் கடந்த ஏப்ரல் 2 ம் தேதி முதல் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பிறகு கூடுதல் குற்றப்பத்திரிக்கை ஏப்ரல் 25 ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்த குற்றப்பத்திரிக்கையில்தான் கனிமொழி ஒரு கூட்டு சதியாளர் என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தது. தற்போது 2 வது கூடுதல் குற்றப்பத்திரிக்கை அதாவது கணக்குப்படி 3 வது குற்றப்பத்திரிக்கை ஜூலை முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.
இதை தாக்கல் செய்வதற்கு சி.பி.ஐ. மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இந்த குற்றப்பத்திரிக்கையில் பல்வேறு நிறுவனங்களை சேர்ந்த சில முக்கிய புள்ளிகளின் பெயர்கள் இடம் பெறும் என்று தெரிகிறது. இந்த குற்றப்பத்திரிக்கையில் குறைந்த பட்சம் இரண்டு முக்கிய புள்ளிகள் இடம்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. இவர்களுக்கு எதிரான ஆதாரங்கள் தங்களுக்கு கிடைத்து விட்டதாகவும், அவர்களிடம் துருவித் துருவி விசாரணை நடந்து வருவதாகவும் சி.பி.ஐ. அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆனாலும் அவர்களது பெயர் என்ன? அவர்கள் யார்? என்ற விபரத்தை கூற அவர் மறுத்து விட்டார்.
அடுத்து தாக்கல் செய்யப்படவிருக்கும் கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் மேலும் பல தனியார் நிறுவனங்களின் பெயர்களும் சேர்க்கப்படும் என்றும் தெரிகிறது.  2001 ம் ஆண்டு முதல் 2007 ம் ஆண்டு வரை ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்பாக சி.பி.ஐ. தற்போது விசாரித்து வருகிறது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின் பேரிலேயே சி.பி.ஐ. இந்த விசாரணையை நடத்தி வருகிறது. இந்த நிலையில் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பிரிவை சேர்ந்த கூட்டுக் குழு ஒன்று கடந்த மாதம் மொரீசியஸ் சென்று விசாரணை நடத்தியது. தற்போது விசாரணைக் குழு லண்டன் சென்று விசாரணை நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது. அப்போது மேலும் பல தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony