முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பத்திரிகையாளர் கொலை: குற்றவாளிகளைக் கைது செய்ய மராட்டிய முதல்வர் உத்தரவு

திங்கட்கிழமை, 13 ஜூன் 2011      அரசியல்
Image Unavailable

மும்பை, ஜூன் - 13 - மும்பையில் புலனாய்வு பத்திரிகையாளர் ஜோதிர்மாய் தே கொல்லப்பட்டதற்கு காரணமான குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மும்பை போலீஸ் கமிஷனர் அருப் பட்நாயக்கிற்கு மகாராஷ்ட்ர மாநில  முதல்வர் பிருத்திவிராஜ் சவுகான் உத்தரவிட்டுள்ளார். கொல்லப்பட்ட புலனாய்வு பத்திரிகையாளர் மிட்டே பத்திரிகையில் பணியாற்றியவர். இவர் நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத கொலையாளிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து மாநில முதல்வர் பிருத்திவிராஜ் தமது இல்லத்தில் அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். இந்த கூட்டத்தில் அம்மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல், போலீஸ் கமிஷனர் பட்நாயக், இணைக் கமிஷனர் ராய் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பாட்டீல் கூறுகையில், பத்திரிகையாளர்களை பாதுகாக்க தங்களது அரசு போதுமான நடவடிக்கைகளை எடுக்கும் என்று உறுதியளித்தார். இந்த வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய சிறப்பு போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்நிலையில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் ஜோதிர்மாயின் உடல் நேற்று புறநகரான  காட்கோபரில் தகனம் செய்யப்பட்டது.
முன்னதாக ஜோதிர்மாய் உடலுக்கு மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் மற்றும் ஏராளமான பத்திரிகையாளர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்