முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பை தாக்குதல் வழக்கை விசாரித்துவந்த பாக். நீதிபதி மாற்றம்

செவ்வாய்க்கிழமை, 14 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

 

இஸ்லாமாபாத், ஜூன் 14 - மும்பை தாக்குதல் வழக்கில் தொடர்புடைய 7 தீவிரவாதிகளின் விசாரணையை நடத்திவந்த பாகிஸ்தான் நீதிபதி ஒருவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 ம் தேதி மும்பையின் பல இடங்களில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் பயங்கர தாக்குதலை நடத்தினர். 160 க்கும் மேற்பட்டோர் பலியான இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தானில் உள்ள சில முக்கிய தீவிரவாதிகள் மூளையாக இருந்து செயல்பட்டனர் என்பதற்கான ஆதாரங்களை பாகிஸ்தானிடம் இந்திய அரசு அளித்திருந்தது. இதன் அடிப்படையில் அந்த தீவிரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானை இந்தியா கேட்டுக்கொண்டது.

இதையடுத்து 7 தீவிரவாதிகளை பாகிஸ்தான் போலீசார் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்குகளை ராணா நிசார் அகமது என்ற நீதிபதி விசாரித்து வந்தார். ராவல்பிண்டியில் உள்ள தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் எண் 3 ல் நீதிபதியாக நியமிக்கப்பட்டது முதற்கொண்டே இந்த நீதிபதி இந்த வழக்கை விசாரித்து வந்தார். அவர் கடந்த சனிக்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டார். 

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 5 பேருக்கு எதிரான வழக்கையும் நீதிபதி அகமதுவே விசாரித்து வந்தார். இந்த நீதிபதியை ஷகார்காரில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதியாக நியமித்து லாகூர் ஐகோர்ட்டு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. 

பெனாசிர் பூட்டோ படுகொலை வழக்கில் ஒத்துழைப்பு தராத பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப்பிற்கு நிரந்தர கைது வாரண்டை இந்த நீதிபதிதான் பிறப்பித்திருந்தார். இந்த உத்தரவை பிறப்பித்த சில மணி நேரங்களிலேயே இந்த நீதிபதி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony