டீசல் விலை உயர்வு எப்போது?

வியாழக்கிழமை, 16 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி,ஜூன்.16 - டீசல், கேஸ் விலையை உயர்த்துவது பற்றி பிரதமருடன் மத்திய மந்திரி ஜெய்பால் ரெட்டி ஆலோசனை நடத்தினார். சர்வசேத சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்றத்திற்கு ஏற்ப இந்தியாவிலும், பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்யும் உரிமை எண்ணெய் நிறுவனங்களிடையே ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் டீசல், சமையல் கேஸ், மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலையை நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் முக்கிய மந்திரிகள் குழு கூடி முடிவு செய்து வருகிறது. 

கடந்த மாதம் தேர்தல் முடிந்ததும் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 5 உயர்த்தப்பட்டது. எண்ணெய் நிறுவனங்கள் இந்த விலையை அறிவித்தன. இதே போல் டீசல், கேஸ், மண்ணெண்ணெய் விலையை உயர்த்த பெட்ரோலியத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இவற்றின் விலையை உயர்த்தாததால் எண்ணெய் நிறுவனங்களுக்கு 480 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே டீசல் விலையை லிட்டருக்கு  அதிகபட்சம் ரூ. 4 வரையிலும், கேஸ் சிலிண்டருக்கு ரூ. 25 வரையும் உயர்த்த வேண்டும் என்று சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. 

கடந்த வாரம் ஜெய்பால் ரெட்டி, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து டீசல், கேஸ் விலையை உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனால் கேஸ், டீசல் விலை உயர்த்தப்படும் என்று தகவல் வெளியானது. பெட்ரோலியப் பொருட்களின் விலையை நிர்ணயம் செய்யும் மத்திய மந்திரிகள் கூட்டம் கடந்த மாதம் 11 ம் தேதி நடப்பதாக இருந்தது. கடைசி நேரத்தில் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது. 

இந்த நிலையில் பெட்ரோலியத் துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி, நேற்று பிரதமர் மன்மோகன்சிங்கை 15 நிமிடம் சந்தித்து பேசினார். ஆனால் அவர் என்ன பேசினார் என்ற விவரத்தை வெளியிட மறுத்து விட்டார். என்றாலும் டீசல், கேஸ், மண்ணெண்ணெய் விலை உயர்த்தப்படலாம் என்று தெரிகிறது. இதனிடையே பெட்ரோல் விலையை மீண்டும் உயர்த்துவது குறித்து மீண்டும் எண்ணெய் நிறுவனங்கள் ஆலோசித்து வருவதாக தெரிகிறது. எனவே அடுத்த வாரம் சிறிய அளவில் பெட்ரோல் விலை மீண்டும் உயர்த்தப்படும் என்று தெரிகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்: