கடுமையான வெப்பம்: ஏர் இந்தியா விமானங்கள் ரத்து

வியாழக்கிழமை, 16 ஜூன் 2011      வர்த்தகம்
Image Unavailable

 

சத்தர்பூர், ஜூன் 16 - கடுமையான வெப்பம் காரணமாக மத்திய பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற கஜுராஹோ சுற்றுலா தலத்திற்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை குறைந்ததை அடுத்து இந்த நகருக்கு செல்லும் விமானங்களை ஏர் இந்தியா ரத்து செய்துள்ளது. 

மத்திய பிரதேச மாநிலம் கஜுராஹோ என்ற இடம் உலகப் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்கிவருகிறது. இங்கு பழங்கால சிற்பங்கள், ஓவியங்கள் நிறைந்துள்ளன. இந்த சிற்பங்கள் மற்றும் ஓவியங்களை பார்ப்பதற்காக உலகம் முழுவதும் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருவது உண்டு. இந்த சுற்றுலா பயணிகளுக்காக பல்வேறு விமான கம்பெனிகள் விமானங்களை இயக்கி வருகின்றன. ஆனால் இப்போது கடுமையான வெப்பம் அங்கே நிலவுவதால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இதையடுத்து கிங்பிஷர் விமான கம்பெனி தனது கஜுராஹோ  விமான சேவையை கடந்த மார்ச் 26 ம் தேதி நிறுத்திவிட்டது. இதனைத் தொடர்ந்து ஜெட் ஏர்வேய்ஸ் விமான கம்பெனியும் கடந்த ஏப்ரல் 30 ம் தேதி முதல் கஜுராஹோவுக்கான விமான சேவையை  நிறுத்திவிட்டது. இந்த நிலையில் பொதுத் துறை விமான கம்பெனியான ஏர் இந்தியா நேற்றுமுதல் கஜுராஹோ விமான சேவையை நிறுத்திவிட்டது என்று ஏர் இந்தியாவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

கஜுராஹோ சுற்றுலா தலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டதால் தங்களது கம்பெனியும் விமான சேவையை நிறுத்திவிட்டதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: