முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

வெள்ளிக்கிழமை, 17 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.17 - சென்னையில் கடத்தப்பட்டு காணாமல் போய் பிணமாக கண்டெடுக்கப்பட்ட வழக்கறிஞர் சதீஷ்குமார் கொலை செய்யப்பட்டது பிரேத பரிசோதனையில் உறுதியானது. இதையடுத்து முழுமையான நீதி விசாரணை கேட்டு வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுபற்றி விவரம் வருமாறு:-

சென்னை திருமங்கலத்தில் வசிக்கும் பிரபல வழக்கறிஞர் சங்கரசுப்புவின் மகன் வழக்கறிஞர் சதீஷ்குமார் கடந்த 7-ம் தேதி காணாமல் போய் 5 நாள் கழித்து ஐ.சி.எப். ஏரியில் பிணமாக மீட்கப்பட்டார். அவருடைய மோட்டார் சைக்கிள் அங்கு அனாதையாக நின்றிருந்தது. தன்னுடைய மகனை இன்ஸ்பெக்டர்கள் ரியாசுதீன், கண்ணன் ஆகியோர் கூலிப்படையை ஏவி கொலை செய்ததாக குற்றம் சங்கர சுப்பு சாட்டியிருந்தார்.

சதீஷ்குமாரின் உடல் பிரேத பரிசோதனையை தாங்கள் குறிப்பிடும் மருத்துவர்கள் செய்யவேண்டும் என்றும், பிரேத பரிசோதனையை வீடியோ படம் எடுக்கவேண்டும் என்றும் கேட்டிருந்தார். அதன்பிறகு மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்து அந்த வீடியோ படம் எடுத்து அதன் அறிக்கை சீலிட்டு ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில் சதீஷ்குமமாரின் கழுத்து அறுப்பட்ட நிலையில் இருந்ததாகவும், இது கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் வழக்கறிஞர்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கொலைக்கு நீதி விசாரணை வேண்டும் என்று கோரினர். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பால்கனகராஜ் தலைமையில் வழக்கறிஞர் குழு ஒன்று கமிஷனர் திரிபாதியை சந்தித்து வழக்கை துரிதப்படுத்தக் கோரினர்.

நேற்று சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞர்கள் சங்க பொதுக்குழு கூடி வழக்கை துரிதமாக விசாரிக்க வலியுறுத்தியும் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரியும் வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தனர். பின்னர் வழக்கறிஞர்கள் கோஷமிட்டப்படி ஊர்வலமாக சென்றனர். பின்பு நேற்று ஒருநாள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

எழும்பூர் மெட்ரோபாலிடன் மாஜிஸ்ட்ரேட் கோர்ட் வழக்கறிஞர்கள் நேற்று சங்க தலைவர் மைக்கேல் தலைமையில் ஆதித்தனார் சாலையில் எழும்பூர் கோர்ட் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதனிடையே இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. அரசு தரப்பு வழக்கறிஞர் நவநீதிகிருஷ்ணன், சி.பி.ஐ.க்கு மாற்ற தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்று கூறியதை அடுத்து சி.பி.ஐ. விசாரிக்க டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony