அரசு ஊழியர்களை இழிவுப்படுத்தி பேசிய கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம்

சனிக்கிழமை, 26 பெப்ரவரி 2011      அரசியல்
vijayakanth1

 

சென்னை, பிப்.27 - போலீஸ் தடியடியால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களை இழிவுப்படுத்தி பேசிய கருணாநிதிக்கு விஜயகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினரும், சாலை பணியாளர்கள் சங்கத்தை சேர்ந்தவர்களும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர். தி.மு.க. அரசு உண்ணாவிரதம் இருந்த சங்க பிரதிநிதிகளை அழைத்து பேசவில்லை. சங்கங்களின் பிரதிநிதிகள் செயலகத்தை முற்றுகையிடப் போவதாக  அறிவித்து புறப்பட்டனர்.

ஊர்வலமாக வந்த அரசு ஊழியர்கள் புதிய தலைமை செயலக நுழைவு வாயில் அருகில் வந்தவுடன் சற்றும் எதிர்பாராத வகையில் அவர்களை காவல் துறையினர் மறித்து காட்டுமிராண்டித்தனமாக தடியடி நடத்தியுள்ளனர்.  இதில் அரசு ஊழியர்கள் பலர் படுகாயமடைந்து இரத்தம் சொட்டச் சொட்ட ஓடியுள்ளனர். சிலருக்கு மண்டை உடைந்துள்ளது. மருத்துவமனையில் பலர் சிகிச்சை பெற்றும் வருகின்றனர். காவல் துறையின் இந்த கண்மூடித்தனமாக தாக்குதலினால் அந்த இடமே போர்க்களம்போல் காட்சியளித்தது. அரசு ஊழியர்கள் பலரையும், நிர்வாகிகளையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் படித்தால் மட்டும் போதாது என்றும், பகுத்தறிவோடு சிந்திக்க வேண்டும் என்றும் முதல்வர் கருணாநிதி பேசியிருப்பது அவர்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்துவது மட்டுமல்ல அவர்களது படிப்பையும் இழிவுப்படுத்தியுள்ளார். தி.மு.க. அரசின் இந்த அணுகுமுறையை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: