முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய கல்விக் கட்டணம்: பெற்றோர்கள் போராட்டம்

வெள்ளிக்கிழமை, 17 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,ஜூன்.17 - பள்ளிக் கல்வி அலுவலகத்தில் புதிய கல்வி கட்டணத்தை கண்டித்து சென்னையில் மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர். தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள நிலையில் இந்த கட்டணம் போதாது, மேலும் உயர்த்த வேண்டும் என்று கோரி தனியார் பள்ளி நிர்வாகத்தினர் மேல் முறையீடு செய்ய முடிவு செய்துள்ளனர். இதற்கிடையே தனியார் பள்ளிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட புதிய கல்வி கட்டணம் அதிகம் என்றும் அதனை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி சென்னையில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அகில இந்திய மாணவர் கழகம், புரட்சிகர இளைஞர் கழகம் ஆகியவை இணைந்து சென்னை கல்லூரி சாலையில் உள்ள கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சென்னையில் உள்ள அதிக கட்டணம் வசூலித்த 2 பள்ளிகள் முன்பும் போராட்டம் நடத்தப்பட்டது. மாநில நிர்வாகிகள் பாரதி, சுரேஷ் ஆகியோர் தலைமையில் திரண்டு மாணவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர். இது குறித்து பாரதி சுரேஷ் கூறியதாவது, 

தனியார் பள்ளிகளுக்கு ரவிராஜ பாண்டியன் கமிட்டி நிர்ணயித்த கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். ரூ. 3,500 முதல் ரூ. 11,000 வரை ஏற்கனவே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அது தற்போது ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 28, ஆயிரம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இது 100 சதவீதத்திற்கும் அதிகமானதாகும். ஏழை, எளிய மாணவர்கள் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கட்டாய நன்கொடை பெற்று வருகிறார்கள். இந்த கட்டணம் அதனை ஊக்கப்படுத்தும் வகையில் உள்ளது. ஆகவே தனியார் பள்ளிகளை அரசு ஏற்று நடத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இந்த நிலையில் சென்னையில் உள்ள இரு வெவ்வேறு இடங்களில் அமைந்துள்ள பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக எழுந்த புகாரை அடுத்து பெற்றோர்கள் அங்கு கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony