முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.எல்.ஏ. பதவியிலிருந்து விலக கருணாநிதிக்கு யோசனை

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜுன் 19 - சட்டசபை கூட்டங்களில் கலந்துகொள்ளாமல் எம்.எல்.ஏ. பதவியை கருணாநிதி வீணாக்குவதைவிட அந்தப் பதவியில் இருந்து விலகிக்கொள்வதே அவருக்கு நல்லது என்று கருணாநிதிக்கு, முன்னாள் எம்.பி. முத்துமணி யோசனை தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் எஸ்.முத்துமணி ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருப்பதாவது:-

தமிழ்நாடு சட்டப்பேரவை மக்களாட்சி மரபுகளை தொடக்கம் முதல் கட்டிக்காத்து வந்து இருக்கிறது. சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் அதன் அமர்வு காலங்களில் பங்கேற்பதைப்பற்றி விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் சட்டமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்து வருகிறார் கருணாநிதி. எப்படியென்றால் சட்டமன்றத்திற்கு வந்து நுழைவு இடத்தில் வருகைப் பதிவேட்டில் கையொப்பம் இட்டாலே சட்டமன்றத்தில் கலந்துகொண்டதாக எடுத்துக்கொள்ளப்படும் என கருணாநிதி போன்றவர்கள் கருதுகிறார்கள். ஆனால் உண்மையான அந்த விதிமுறை என்ன என்பதை இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 190(4) கூறுகிறது. அதாவது தொடர்ந்தாற்போல் ஒரு மாநில சட்டமன்ற கூட்டங்களுக்கு அனுமதியின்றி 60 நாட்களுக்கு மேல் ஒரு உறுப்பினர் வருகை தராதிருந்தால் அவருடைய இடம் காலியாக இருக்கிறது என அறிவிக்கப்படலாம். அந்த 60 நாட்களைக் கணக்கெடுக்கும்போது, தொடர்ந்தாற்போல் நான்கு நாட்களுக்கு மேல் சபையின் நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டு இருந்தாலும் அல்லது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலும் அத்தகைய நடவடிக்கைகளை கணக்கில் எடுத்துக்கொள்ளக் கூடாது என சொல்லப்பட்டிருக்கிறது. 

இதிலிருந்து வருகைப் பதிவேட்டில் கையொப்பம் இட்டால் மட்டும் போதாது. சட்டமன்ற அமர்வுக் கூட்டத்தில் நேரடியாகப் பங்குபெற வேண்டும் என்பதே தெளிவான உண்மை ஆகும். இதைப் புரிந்துகொள்ளாமலேயே மக்களாட்சி மரபுகளை புறக்கணிக்கத் திட்டமிடுகிறார். இது அரசமைப்புச் சட்ட விதியையே அவமானப்படுத்துவது ஆகும். ஆகவே இவர் சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து சட்டப்படி நீக்கப்படுவதற்கான முகாந்திரங்களை உருவாக்குகிறார். 

தமிழ்நாடு சட்டப்பேரவை விதி 20(1)ன்படி பேரவைக் கூட்டங்களுக்கு வராமல் இருப்பதற்கான அனுமதியை உறுப்பினர்களுக்கு அளிக்கலாம். அதற்கான விவாதம் ஏதுமின்றி அந்தத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படும். உள்பிரிவு (2) ன்படி பேரவையின் அனுமதியைப் பெறாமல் தொடர்ந்து 60 நாட்களுக்கு எல்லாக் கூட்டங்களுக்கும் எந்த உறுப்பினராவது வராமல் இருந்துவிட்டால் அவருடைய பதவி காலியானதாக அறிவிக்கப்படும். அதற்குரிய தீர்மானத்தைப் பேரவை உறுப்பினர் எவரேனும் முன்மொழிந்து  அந்தத் தீர்மானம் திருத்தம் எதுவுமின்றி பேரவையின் வாக்கெடுப்புக்கு விடப்படும். அரசமைப்புச் சட்டத்தின் 190 ஆவது பிரிவின் 4 வது உட்பிரிவின்படி கணக்கிடப்பெற்ற 60 நாட்களுக்குத் தொடர்ந்து எல்லாக் கூட்டங்களுக்கும் வராதவராக அந்த உறுப்பினர் இருக்க வேண்டும். 

இந்த விதிமுறைகளின்படி பேரவையின் கூட்டங்களுக்கு 60 நாட்களுக்கு தொடர்ந்து ஒருவர் வராமல் இருந்தால் அவர் தன்னுடைய உறுப்பினர் பதவியையே இழந்துவிட நேரிடும் என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

தி.மு.க. தலைவர் கருணாநிதியைப் பொறுத்தமட்டில் 2001 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்றிருந்தாலும் தி.மு.க.வின் பொதுச் செயலாளர் க.அன்பழகனையே தி.மு.க.வின் சட்டமன்ற கட்சித் தலைவராகவும், அவரையே எதிர்க்கட்சி தலைவராகவும் தேர்ந்தெடுத்து, பேரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ளாமலேயே  ஐந்து ஆண்டுகளைக் கழித்துவிட்டார் கருணாநிதி. உறுப்பினர் பதவியைப் பறிப்பதற்கான தீர்மானம் எதனையும் கொண்டுவராமலேயே அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா தவிர்த்துவிட்டார். அ.தி.மு.க.வின் தோழமைக் கட்சிகளும் அத்தகைய முயற்சியில் ஈடுபடவில்லை.

சென்றமுறை நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரின்போது பேரவைத் தலைவரைப் பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை அனைத்திந்திய அண்ணா தி.மு.க. கொடுத்திருந்தது. இந்திய அரசமைப்புச் சட்ட விதி 197 ன்படி 14 நாட்கள் முடிவடைந்த பின்னரே அந்தத் தீர்மானத்தைப் பேரவையில் முன்மொழிவதற்கு  அனுமதிக்கப்பட வேண்டும். தமிழ்நாடு சட்டப்பேரவை விதி 68 ன் படி பேரவைத் தலைவர் அல்லது  துணைத்தலைவரைப் பதவியில் இருந்து நீக்குவதற்கான தீர்மானத்தைக் கொடுக்க விரும்பும் உறுப்பினர் எழுத்து மூலமாக தீர்மான வரைவுடன் செயலாளருக்கு 14 நாட்கள் முன்னறிவிப்புடன், அதன் பிரதி ஒன்றை பேரவைத் தலைவருக்கும் கொடுக்க வேண்டும். ஆயினும், அவ்வாறு தனித் தீர்மானத்தை முன்மொழிய இருக்கும் தன்னுடைய எண்ணம் பற்றி செயலாளருக்கு குறைந்தது 14 நாட்கள் முன்னறிவிப்புக் கொடுக்கப்பெற்றாலன்றி அதற்கான தனித் தீர்மானம் எதுவும் முன்மொழியப்பெறுதல் கூடாது என்றும் விதியில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேற்கண்ட 68 வது விதியின்படி முன்னறிவிப்புப் பெற்றவுடன், அனுமதிகோரும் தீர்மானம் ஒன்று உரிய உறுப்பினர் பெயரில் அரசமைப்புச்சட்டம் 179 வது பிரிவின் படி தேவைப்படும் 14 நாட்கள் முன்னறிவிப்புக்காலம் முடிந்தவுடன் கூட்டப்பெறும் முதல் கூட்ட நாளில் அலுவல் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும். இம்மாதிரித் தீர்மானம் கேள்வி நேரம் முடிவுற்றதும் உடனடியாக ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்றும், பேரவை விதி 69 இல் தெள்ளத்தெளிவாக கூறப்பட்டிருக்கிறது. ஆயினும் இந்த விதிமுறைகளுக்கு முற்றிலும் மாறாகப் பேரவைத் தலைவருக்கு எதிராக தீர்மானம் கொடுக்கப்பட்ட நாளிலேயே அது விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இவ்வாறு விதிகளுக்குப் புறம்பாக நடைபெற்ற விவாதத்திற்குப் பிறகு அந்தத் தீர்மானம் தோல்வி அடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டது. 

பேரவைத் தலைவருக்கு கொண்டுவரப்படும் தீர்மானத்தை அனுமதிப்பதற்கு 35 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தாலே போதும். அனைத்திந்திய அ.தி.மு.க. விற்கு 60 க்கு மேற்பட்ட உறுப்பினர்கள் இருந்ததால் தீர்மானத்தை அனுமதிப்பதில் எந்தவித சிக்கலும் ஏற்படவில்லை. ஆயினும் அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகளிலும் சட்டமன்ற விதிமுறைகளிலும் தெரிவிக்கப்பட்டிருந்த 14 நாட்கள் முன்னறிவிப்புக்காலம் முடிவடைவதற்கு முன்னரே தன் விருப்பம்போல், பேரவைத் தலைவர் தனக்கு எதிரான தீர்மானத்தின் மீதான விவாதத்தை உடனடியாக மேற்கொள்வதற்கு  ஆணை பிறப்பித்தார்.  அதன் மூலம் விதிகளுக்குப்புறம்பாக பேரவையை  நடத்துவதற்கு முற்பட்டார். 

தற்போது முதல்வர் ஜெயலலிதாவின் சீரிய தலைமையில் அமைந்துள்ள அ.தி.மு.க. அரசு, கடந்த காலத்தில் நடைபெற்ற விதி மீறல்களுக்கு விடை கொடுத்துவிட்டு அரசமைப்புச் சட்டத்தின்படியும், பேரவை விதிமுறைகளின்படியும் அவையை நடத்திச்செல்வது என்று உறுதி பூண்டுள்ளது. சட்டப் பேரவையின் முற்றத்தில் வைக்கப்பட்டுள்ள உறுப்பினர் வருகைப் பதிவேட்டில் கையொப்பம் இட்டுவிட்டு பேரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ளாமலே சென்றுவிடுவதை அனுமதிக்க முடியாது. வருகைப் பதிவேடு என்பது உறுப்பினர்கள் கையொப்பம் இட்டுவிட்டு உள்ளே வருவதற்காகத்தான் வைக்கப்பட்டிருக்கிறது. அவைக்கு வராமல் சென்றுவிட்டால் அது வராமைப் பதிவேடாக மாறிவிடும். தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியர்கள் தங்கள் வருகைக்கான அட்டையை பஞ்ச் செய்துவிட்டு உள்ளே செல்வார்கள். ஆனால் அட்டையை பஞ்ச் செய்துவிட்டு உள்ளே செல்லாமல் வெளியே சென்றுவிட்டால் அவர் பணிக்கு வந்ததாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. அதேபோன்றுதான் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருப்பதாக கூறி வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட்ட உறுப்பினர் எவரேனும் கூட்டத்திற்கு வராமலே சென்றுவிட்டால் அவர் அன்றைய கூட்டத்திற்கு வரவில்லை என்றுதான் கணக்கிடப்படும். 

கருணாநிதியைப் பொறுத்தவரை புறக் கூடத்தில் வைக்கப்பட்டுள்ள வருகைப் பதிவேட்டில் மட்டும் கையொப்பம் இட்டுவிட்டு கூட்டத்திற்கு வராமல் சென்றுவிடுவதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார். இம்முறை தன் மகன் ஸ்டாலினை தி.மு.க. சட்டமன்ற குழுவுக்கு தலைவராக ஆக்கிவிட்டு அவர் மட்டும் வெளியிலேயே தங்கிவிட்டார். தொடர்ந்து 60 நாட்களுக்கு அவர் சட்டமன்றக் கூட்டத்திற்கு வராமல் இருந்துவிட்டால், அவருடை பதவி காலியாகிவிட்டதாக அறிவிக்கும் தீர்மானம் ஒன்றை பேரவையில் கொண்டுவந்து நிறைவேற்றுவதற்கு வாய்ப்பிருக்கிறது. 

இந்நிலையில் சட்டமன்ற கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாதவாறு முடக்கப்பட்டிருக்கும் கருணாநிதிக்கு  தன்னுடைய உறுப்பினர் பதவியை விட்டு விலகிக் கொள்வதுதான் ஒரே வழியாக அமைந்திருக்கிறது. பதவி இருந்தும் அதை பயன்படுத்த முடியாத நிலையில் வீணாகப் பற்றிக்கொண்டு இருப்பதை விட அதனை விட்டுவிட்டு விலகிக்கொள்வதே அவருக்கு நல்லது. இல்லாவிட்டால் வள்ளுவர் குறிப்பிடுவதைப் போல களர் நிலத்தை ஒத்தவராகவே கருதப்படுவார். 

இவ்வாறு முன்னாள் எம்.பி. முத்துமணி குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்