தேசியவாத காங்கிரசிலிருந்து எம்.எல்.ஏ. திலீப் வாஹ் நீக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 27 பெப்ரவரி 2011      அரசியல்

 

மும்பை,பிப்.27  - கற்பழிப்பு குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. திலீப் வாஹ், அந்த கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தும்படியும் அரசுக்கு கட்சி பரிந்துரை செய்துள்ளது. 

நாட்டில் ஏராளமான இளம் பெண்களும் இளைஞர்களும் படித்துவிட்டு வேலையில்லாமல் அலைகிறார்கள். இவர்களில் ஒருவர்தான் மகாராஷ்டிரா மாநிலம் ஒளரங்காபாத் நகரை சேர்ந்த 20 வயது இளம் பெண். இந்த பெண், வேலை விஷயமாக தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. திலீப் வாஹையை பார்த்து உள்ளார். உடனே நாசிக்கில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு வரும்படி அந்த இளம் பெண்ணிடம் திலீப் கூறியுள்ளார். அந்த பெண்ணும் எப்படியும் திலீப் வேலை வாங்கி கொடுத்துவிடுவார் என்ற நம்பிக்கையுடன் கடந்த செவ்வாய்கிழமை சென்றுள்ளார். ஆனால் அங்கு நடந்த விஷயமோ அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக உள்ளது. மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டிய எம்.எல்.ஏ. திலீப், அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக கற்பழித்ததாக கூறப்படுகிறது. இதில் அவமானமடைந்த அந்த பெண், உடனே நாசிக் மாவட்டத்தில் உள்ள சர்க்கார்வதா காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இதனையொட்டி திலீப் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த புகாரையொட்டி திலீப் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விரிவான முறையில் விசாரணை நடத்த வேண்டும் என்று மாநில அரசை தேசியவாத காங்கிரஸ் கேட்டுக்கொண்டுள்ளது. இதை கட்சியின் செய்தி தொடர்பாளர் மதன் பப்னா நேற்று மும்பையில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். திலீப் உதவியாளர் மகேஷ் மாலி மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: