முக்கிய செய்திகள்

எரிபொருள் விலை உயர்வு: நடிகை ஜெயப்பிரதா ஆர்ப்பாட்டம்

திங்கட்கிழமை, 27 ஜூன் 2011      சினிமா
Image Unavailable

 

புதுடெல்லி,ஜூன்-27 - பெட்ரோலிய எரிபொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து, நாடு தழுவிய அளவில் போராட்டம் தொடங்கியுள்ளது. நடிகை ஜெயப்பிரதா நடுரோட்டில் சப்பாத்தி சுட்டு போராட்டம் செய்தார். மத்திய அரசு, டீசல் விலையில் ரூ 3, மண்எண்ணை விலையில் 2, சமையல் வாயு விலையில் ரூ 50 என்ற ரீதியில் கடந்த 24 -ம் தேதி உயர்த்தியது. இதற்கு எல்லா தரப்பு மக்களிடம் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த விலை உயர்வை திரும்ப பெற வேண்டுமென, எதிர்கட்சிகள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக குரல் கொடுத்துள்ளன. அத்துடன் போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்தன. காஷ்மீர், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், பீகார், பஞ்சாப், மாரட்டியம், அரியானா, ஒரிசா, கர்நாடகம், கேரளம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. விலை உயர்வை வாபஸ் பெறாவிட்டால், மத்திய அரசுக்கு வெயில் இருந்து கொடுக்கும் ஆதரவை வாபஸ் பெறுவோம் என்று  சமாஜ்வாடி கட்சி எச்சரித்துள்ளது. 

நடிகை ஜெயப்பிரதா எம்.பி., உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூரில் தனது ஆதரவாளர்களுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினார். அப்போது, நடுரோட்டில் செங்கற்களால் அடுப்பு அமைத்து சப்பாத்தி சுட்டார். மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில், முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா தலைமையில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். மும்பையில் உள்ள பெட்ரோலிய பவன் அலுவலகம் முன்பு 100 -க்கும் மேற்பட்ட பாரதிய ஜனதா தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த வந்தனர். அவர்களை போலீசார் கைது செய்தார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்: