முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிலிண்டருக்கு ரூ.15 குறைகிறது: முதல்வர் நடவடிக்கை

செவ்வாய்க்கிழமை, 28 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.29 - மக்களின் சுமையை போக்கும் வகையில் சமையல் எரிவாயு விலையில் ரூ.14.73 குறைகிறது, வாட் வரியை நீக்கி முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

 சர்வதேச சந்தை விலைக்கு ஏற்றாற்போல் பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் உரிமை மத்திய அரசால் எண்ணெய் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டதன் விளைவாக, பெட்ரோல் விலை அடிக்கடி உயர்ந்து வரும் நிலையில், 24.6.2011 நள்ளிரவு முதல் டீசலுக்கான விலையை லிட்டருக்கு 3 ரூபாயும், சமையல் எரிவாயுவிற்கான விலையை சிலிண்டர் ஒன்றுக்கு 50 ரூபாயும், மண்ணெண்ணெய்க்கான விலையை லிட்டருக்கு 2 ரூபாயும் உயர்த்தி மைய அரசு அறிவித்துள்ளது.    

பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக,  அத்தியாவசியப் பொருட்கள் உட்பட அனைத்துப் பொருட்களின் விலையும் பன்மடங்கு உயர வாய்ப்புள்ளது. இந்த விலை உயர்வு அனைத்துத் தரப்பு மக்களையும் வெகுவாக பாதிக்கும் என்பதில் இருவேறு கருத்திற்கு இடமில்லை. இதிலும் குறிப்பாக சமையல் எரிவாயுவின் விலை சிலிண்டர் ஒன்றுக்கு 50 ரூபாய் வீதம் உயர்த்தப்பட்டதன் விளைவாக தாய்மார்கள் விரக்தியில் உறைந்து போயுள்ளனர். மேல்தட்டு மக்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த சமையல் எரிவாயுவை, கரி, விறகு, மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலை உயர்வு மற்றும் பற்றாக்குறை காரணமாக, கீழ்த்தட்டு நடுத்தர மக்களும் தற்போது பயன்படுத்த ஆரம்பித்துள்ள சூழ்நிலையில், சமையல் எரிவாயுவின் விலையை சிலிண்டர் ஒன்றுக்கு 50 ரூபாய் என்ற அளவிற்கு விலையை மைய அரசு உயர்த்தி அறிவித்திருப்பது மக்களால் தாங்க இயலாதது ஆகும். உலக அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது என்ற காரணத்தைக் காட்டி பெட்ரோலியப் பொருட்களுக்கான விலையை மத்திய அரசு உயர்த்திவிட்டு, மாநில அரசுகள் பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரியினைக் குறைக்க வேண்டும் என்று அறிவுரை வழங்குவது வேடிக்கையானது ஆகும். நம் நாட்டு தேவைக்கான பெட்ரோலியப் பொருட்கள் அனைத்துமே வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயின் மூலம் மட்டும் தயாரிக்கப்படுவது அல்ல. உள்நாட்டில் பெறப்படும் கச்சா எண்ணெயின் மூலமும் பெட்ரோலியப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.  எண்ணெய் நிறுவனங்களின் லாப நோக்கு, நிர்வாகத் திறமை, நிர்வாகச் செலவுகள் ஆகியவையும் பெட்ரோலியப் பொருட்களின் விலை நிர்ணயத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.  இவற்றை எல்லாம் கருத்தில் கொள்ளாமல், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயின் விலையை மட்டும் சுட்டிக்காட்டி மைய அரசு தனது பொறுப்பை தட்டிக் கழிப்பது என்பது ஒப்புக் கொள்ள முடியாத ஒன்றாகும். இவ்வாறு, பல்வேறு வழிமுறைகளையும் ஆராய்ந்து, டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலை உயராதவாறு பார்த்துக் கொள்ள நடவடிக்கை எடுக்காமல், மாநில அரசுகள் பெட்ரோலியப் பொருட்கள் மீதான மதிப்பு கூட்டு வரியைக் குறைக்க வேண்டும் என்று மைய அரசு அறிவுரை கூறுவது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல. எனவே தான், டீசல், சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் விலை உயர்வினை கண்டித்ததோடு மட்டுமல்லாமல், இந்த விலை உயர்வினை மைய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று நான் கேட்டுக் கொண்டேன். 2006 முதல் 2011 வரையிலான முந்தைய தி.மு.க. ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மை காரணமாக தமிழ்நாட்டின் கடன் சுமை  1 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் அதிகரித்துவிட்டது. இது மட்டுமல்லாமல்,  தமிழ்நாடு மின்சார வாரியம், மாநில போக்குவரத்துக் கழகங்கள், ஆவின் நிறுவனம் உட்பட பெரும்பாலான பொதுத் துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஒப்பந்ததாரர்கள், ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்கிய விவசாயிகள் ஆகியோருக்கு எல்லாம் பல மாதங்களாக நிலுவைத் தொகையை வழங்காமல் விட்டுச் சென்றுள்ளது முந்தைய தி.மு.க. அரசு.  இதுவன்றி, கடந்த தி.மு.க. ஆட்சியின் நிர்வாகச் சீர்கேட்டினால், ஒவ்வொரு துறையும் மிக அதிக அளவிலான தொடர் இழப்பை கடந்த 5 ஆண்டுகளில் சந்தித்து வந்துள்ள சூழ்நிலையில், மத்திய அரசு பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வை திரும்பப் பெறுவதற்கான அறிகுறிகள் இல்லாத சூழ்நிலையில், தற்போது சமையல் எரிவாயுவின் விலை மிக அதிகபட்சமாக 50 ரூபாய் அளவுக்கு ஏற்றப்பட்டுள்ளது என்பதைக் கருத்தில் கொண்டும்,  அனைத்துத் தரப்பு மக்களும் பயன்படுத்தும் சமையல் எரிவாயு விலை உயர்விலிருந்து அவர்களைப் பாதுகாக்க தமிழக அரசால் வழங்கக்கூடிய நிவாரணம் அனைத்தையும் வழங்க நான் முடிவு செய்துள்ளேன். அதன் அடிப்படையில், மாநில அரசின் அதிகார வரம்பிற்குட்பட்டு, இனிமேல் குறைப்பதற்கு ஏதுமில்லை என்ற அளவில் சமையல் எரிவாயுவின் விலையை குறைக்க நான் முடிவு எடுத்துள்ளேன். 

அதன்படி, சமையல் எரிவாயு மீது தற்போது விதிக்கப்பட்டு வரும் 4 விழுக்காடு மதிப்புக் கூட்டு வரியை 1.7.2011 முதல் அறவே நீnullக்கிட நான் ஆணையிட்டுள்ளேன். இதனையடுத்து, தமிழ்நாட்டில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் ஒரு சிலிண்டர் எரிவாயுவின் விலை 404 ரூபாய் 40 பைசா என்ற அளவிலிருந்து 389 ரூபாய் 67 பைசா என்ற அளவிற்கு, அதாவது ஒரு சிலிண்டர் சமையல் எரிவாயுவின் விலை 14 ரூபாய் 73 பைசா அளவிற்கு குறையும் என்பதையும், இனி வருங்காலங்களிலும் சமையல் எரிவாயுவின் மீது மதிப்புக் கூட்டு வரி விதிக்கப்பட மாட்டாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

அண்மையில் மத்திய அரசால் உயர்த்தப்பட்ட 50 ரூபாய் விலை உயர்விற்கு தற்போதுள்ள மதிப்புக் கூட்டு வரியின்படி மாநில அரசிற்கு ஆண்டொன்றுக்கு 16 கோடி ரூபாய் கூடுதலாக வருவாய் கிடைக்கும் என்ற நிலையில், ஏற்கெனவே சமையல் எரிவாயு மீதான மதிப்புக் கூட்டு வரி மூலம் ஆண்டொன்றுக்கு கிடைத்து வந்த 104 கோடி ரூபாய் வருவாயையும் சேர்த்து, மொத்தம் 120 கோடி ரூபாய் இழப்பை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்