பெட்ரோல் - டீசல் விலை மேலும் உயர்ந்தது

வெள்ளிக்கிழமை, 1 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஜூலை.1 - பெட்ரோல்,டீசல் விலை மேலும் உயர்ந்தது. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 27 பைசாவும் டீசல் விலை லிட்டருக்கு 15 பைசாவும் உயர்ந்தது. இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்தது. மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவி ஏற்றதில் இருந்து இதுவரை 10-க்கும் மேற்பட்ட தடவைகள் பெட்ரோல்,டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் நுகர்வோர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். கடந்த வாரம் தான் டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் ஆகிய எரிபொருள் விலையை மத்திய அரசு உயர்த்தியது. ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.3-ம் ஒரு லிட்டணர் மண்ணெண்ணெய்க்கு ரூ.2-ம் ஒரு சிலிண்டர் சமையல் எரிவாயுக்கு ரூ.50-ம் உயர்த்தியது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கக்கூடாது என்பதற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா ஒரு சிலிண்டர் சமையல் கியாசுக்கு ரூ. 15 குறைத்துள்ளார். 

எரிபொருள் விலையை மத்திய அரசு அடிக்கடி உயர்த்தி வந்தாலும் பெட்ரோல் டீலர்களுக்கான கமிஷனை மத்திய அரசு உயர்த்தாமல் காலம் தாழ்த்திவந்தது. இதனால் பெட்ரோல் டீலர்கள் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இந்தநிலையில் மத்திய பெட்ரோலிய்துறை அமைச்சக பிரதிநிதிகளுக்கும் டீலர்கள் சங்க பிரதிநிதிகளுக்கும் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின்போது டீலர்களுக்கு வழங்கப்படும் கமிஷன் உயர்த்தப்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 27 பைசாவும் ஒரு லிட்டர் டீசலுக்கு 15 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வு கமிஷன் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்க வந்ததால் பெட்ரோல், டீசல் விலையும் நேற்று நள்ளிரவு முதல் உயர்ந்தது. இனி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 67.21 பைசாவில் இருந்து ரூ.67.48 பைசாவாக இருக்கும். அதேமாதிரி ஒரு லிட்டர் டீசல் விலை இனி ரூ.43.80 பைசாவில் இருந்து ரூ.43.95 பைசாவாக இருக்கும். 

இதை ஷேர் செய்திடுங்கள்: