முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மன்மோகன்சிங் செப்.6 ல் வங்கதேசம் பயணம்

திங்கட்கிழமை, 4 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, ஜூலை - 5 - பிரதமர் மன்மோகன்சிங் வங்கதேசத்திற்கு வருகிற செப்டம்பர் 6 ம் தேதி பயணமாகிறார். 6 மற்றும் 7ம் தேதிகளில் அந்நாட்டில் அவர் சுற்றுப்பயணம் செய்வார். அப்போது அந்நாட்டு தலைவர்களுடன் இருதரப்பு உறவை மேம்படுத்துவது, எல்லைப் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து அவர் ஆலோசனை நடத்துவார் எனத் தெரிகிறது. கடந்த 12 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் வங்கதேசம் செல்வது இதுவே முதல்முறையாகும். பிரதமரின் 2 நாள் பயணம்பற்றி டெல்லியில் வெளியுறவு விவகார அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா விடுத்த அழைப்பை ஏற்று பிரதமர் மன்மோகன்சிங் அங்கு இரண்டுநாள் அரசுமுறை பயணமாக செல்வதாக தெரிவித்தார். 25 சதவீத வங்கதேச வாசிகள் இந்தியாவுக்கு எதிரானவர்கள் என்று பிரதமர் மன்மோகன்சிங் குற்றம்சாட்டி நான்கு நாட்கள்கூட ஆகாத நிலையில் பிரதமரின் வங்கதேச பயணம்பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சில தினங்களுக்கு முன்பு பத்திரிகை ஆசிரியர்களுடன் கலந்துரையாடிய மன்மோகன்சிங், வங்கதேசம் பற்றி  குறிப்பிட்டார். அப்போது கூறிய அவர், இந்தியா-வங்கதேச உறவு நன்றாகத்தான் உள்ளது. ஆனால் அங்குள்ள 25 சதவீத மக்கள் ஜமீயத் - உல்-இஸ்லாமிய இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் இந்தியாவுக்கு எதிரானவர்கள் என்றும் பல கட்டங்களில் இவர்கள் ஐ.எஸ்.ஐ. (பாகிஸ்தான் உளவு அமைப்பு)யின் பிடியில் இருந்திருக்கிறார்கள் என்றும் கருத்து  தெரிவித்திருந்தார். இவரது இந்த கருத்து அந்நாட்டு அரசியல் கட்சியினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் பிரதமர் அங்கு செல்லவிருக்கிறார். அவரது பயணத்தின் முன்பாக வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா நாளை 6 ம் தேதி வங்கதேசம் செல்கிறார்.  அப்போது அவர் அந்நாட்டு தலைமையுடன் பிராந்திய, இருதரப்பு பிரச்சனைகள் குறித்து பேசுவார் என்று தெரிகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்