விவசாய கடன் ரூ.4 லட்சத்து 75 ஆயிரம் கோடியாக அதிகரிப்பு

செவ்வாய்க்கிழமை, 1 மார்ச் 2011      இந்தியா
Farmer

புதுடெல்லி,மார்ச்.1 - மத்திய பட்ஜெட்டில் விவசாய கடன் ரூ. ஒரு லட்சம் கோடியில் இருந்து ரூ.4 லட்சத்து 75 ஆயிரம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேமாதிரி வட்டி மான்யமும் 4 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 2011-2012-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அப்போது நாட்டில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் விவசாய கடன் ரூ. ஒரு லட்சம் கோடியில் இருந்து 4 லட்சத்து 75 ஆயிரம் கோடியாக அதிகரிக்கப்படும் என்றார். அதேமாதிரி விவசாய கடன்களுக்கான வட்டி மான்யம் ஒரு சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்காக நபார்டு வங்கிக்கு பட்ஜெட்டில் ரூ. 300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காய்கறி விலைகள் திடீர் திடீரென்று உயர்ந்து விடுகிறது. இதனால் குறிப்பாக நகர்ப்புற மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகுகிறார்கள். இதை தடுக்கும் வகையில் காய்கறி உற்பத்தியை அதிகரிக்கவும் அவைகள் பெரும் நகரங்களுக்கு தடையின்றி விரைவில் வருவதற்கும் ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கிராமப்புற பொருளாதாரத்தை வளர்ச்சி அடைய செய்யும் வகையில் ராஷ்ட்ரீய கிரிஷி விகாஸ் யோஜனா திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதி ரூ. 6 ஆயிரத்து 755 கோடியில் இருந்து ரூ. 7 ஆயிரத்து 860 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் வீடு கட்ட கடன் ரூ.20 லட்சத்தில் இருந்து 25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் வீடு கட்டும் திட்டங்களுக்கு ரூ.3 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பட்ஜெட்டில் பல்வேறு நிவாரணங்கள் அளிக்கப்பட்டிருப்பதால் 2011-2012-ம் ஆண்டில் மத்திய அரசுக்கு ரூ. 11 ஆயிரத்து 500 கோடி இழப்பு ஏற்படும் என்று பிரணாப் முகர்ஜி மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: