முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தோல் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி 2 பேர் பலி

செவ்வாய்க்கிழமை, 12 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

திண்டுக்கல், ஜூலை.12 - திண்டுக்கல் அருகே தோல் தொழிற்சாலை கழிவுநீர் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்து கொண்டிருந்த இரு தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். திண்டுக்கல் - வத்தலக்குண்டு பைபாஸ் ரோட்டில் குட்டியபட்டி பிரிவில் வி.எம்.இப்ராகீம்ஷா என்ற தோல் பதப்படுத்தும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையின் பின்புறத்தில் குழாய் மூலம் கழிவுநீர் வெளியேற்றப்பட்டு ஆங்காங்கே தொட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த குட்டியபட்டியைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் தங்கமணி(45), முத்து மகன் ராஜூ(32) ஆகிய இருவரும் கூலித்தொழிலாளிகளாக பணியாற்றி வந்தனர். ஞாயிற்றுக்கிழமை மாலையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் தங்கமணி ஈடுபட்டு வந்தார். தொட்டிக்குள் இறங்கி குழாய் அடைப்பை எடுத்து விட்ட போது தண்ணீருடன் கலந்து வந்த விஷவாயு தாக்கியதில் அவர் தொட்டிக்குள்ளே மூச்சுத்திணறி அலறத் தொடங்கினார். இதைப் பார்த்ததும் அருகில் இருந்த ராஜூ அவரைக் காப்பாற்றுவதற்காக தொட்டிக்குள் இறங்கினார். ஆனால் அவரையும் விஷவாயு தாக்கியது. இதில் இருவரும் தொட்டிக்குள்ளேயே மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.

அப்பகுதியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தவர்கள் தொட்டிக்குள் இருவரும் பிணமாகக் கிடந்தது குறித்து ஊருக்குள் தகவல் தெரிவித்தனர். உடனே இருவரது உறவினர்களும், அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்களும் அங்கு ஒன்று திரண்டனர். இறந்தவர்களின் உடல்களைப் பார்த்து அவர்களது உறவினர்கள் கதறி அழுதனர். மேலும் இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதின் பேரில் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பிணத்தைக் கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக தோல் ஷாப் உரிமையாளர் இப்ராகீம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்