முக்கிய செய்திகள்

எய்சர் மோட்டார் நிறுவனத்திற்கு சிப்காட்டில் 50 ஏக்கர் நிலம்

Image Unavailable

 

சென்னை, ஜூலை.13 - தமிழக முதல்வர் ஜெயலலிதா, நேற்று தலைமை செயலகத்தில், எய்சர் மோட்டார் நிறுவன (முன்னாள் ராயல் என்ஃபீல்ட் நிறுவனம்) விரிவாக்கத்திற்கு, ஒரகடம் சிப்காட் தொழில் வளர்ச்சி மையத்தில் 50 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்ததற்கான கடிதத்தினை அந்நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் சித்தார்த்த லாலிடம் வழங்கினார்.

தமிழ்நாட்டில் நீண்டகாலமாக இயங்கி வருகின்ற புகழ் பெற்ற நிறுவனங்களில், மோட்டார் சைக்கிள் தயாரிப்பில் ஈடுபட்டுவரும் எய்சர் மோட்டார்  நிறுவனமும் (முன்னாள் ராயல் என்ஃபீல்ட் நிறுவனம்) ஒன்றாகும். 1955-ம் ஆண்டுமுதல் தமிழகத்தில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனம், சீரான வளர்ச்சி பெற்று, தற்போது தனது முழு உற்பத்தித்திறனை எட்டியுள்ளது.

மோட்டார் சைக்கிள் விற்பனை ஆண்டொன்றுக்கு 35 சதவீத வளர்ச்சி பெற்று வருகின்ற தற்போதைய சூழ்நிலையில், 350 கோடி ரூபாய் முதலீட்டில், தனது மோட்டார்  சைக்கிள் உற்பத்தித்திறனை ஆண்டொன்றுக்கு 50 ஆயிலிருந்து, ஒரு லட்சத்து 50 ஆயிரமாக அதிகரிக்க அந்த நிறுவனம் முடிவு செய்து, இந்த விரிவாக்க திட்டத்திற்கான நிலத்தை தெரிவு செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வந்தது. அண்டை மாநிலம் ஒன்றில் இத்திட்டத்தை துவக்கவும் எய்சர் மோட்டார் நிறுவனம் பரிசீலித்து வந்தது.

இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டில் தற்போதுள்ள சாதகமான சூழ்நிலை, நல்ல உட்கட்டமைப்பு வசதிகள், திறன்மிக்க தொழிலாளர் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, இந்த விரிவாக்க திட்டத்தினை தமிழ்நாட்டிலேயே நிறுவிட எய்சர் மோட்டார் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதனையடுத்து, இந்நிறுவன விரிவாக்கத்திற்கு ஒரகடம் சிப்காட் தொழில் வளர்ச்சி மையத்தில் 50 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்வதற்கான கடிதத்தினை நேற்று தலைமை செயலகத்தில், தமிழக முதல்வர் ஜெயலலிதா எய்சர் மோட்டார் நிறுவன நிர்வாகிகளிடம்  வழங்கினார். இந்த விரிவாக்க திட்டத்தின் மூலம், சுமார் 3000 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு, 600 நபர்களுக்கு மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்கும்.

இந்நிகழ்ச்சியில், தொழில்துறை அமைச்சர், தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர், தொழில்  துறை முதன்மை செயலர், சிப்காட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர், எய்சர் மோட்டார் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் சித்தார்த்த லால், செயல் இயக்குநர் ஆர்.எல்.ரவிச்சந்திரன், தலைமை செயல் அலுவலர் டாக்டர் வெங்கி பத்மநாபன், முதுநிலை துணைத் தலைவர் பி.கோவிந்தராஜன், துணைத்தலைவர் கே.ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: