முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குற்றாலத்தில் சாரல் திருவிழா நாளை துவங்குகிறது

வெள்ளிக்கிழமை, 22 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

தென்காசி. ஜூலை. 22 - குற்றாலத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் சாரல் திருவிழா நாளை 23.07.2011 துவங்கி 30.07.2011 வரை 8 நாட்கள் நடைபெறுகிறது. இந்த விழாவில் தமிழக அமைச்சர்கள் சொ.கருப்பசாமி, கோகுலஇந்திரா, ராஜா.செந்தூர்பாண்டியன், மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து 

கொள்கிறார்கள். குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் சீசன் காலமாக கருதப்படும். இந்த சீசன் காலத்தில் உலகம் முழுவதும் உள்ள சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வருகை தருவார்கள். சீசன் காலத்தில் ஆண்டு தோறும் குற்றாலத்தில் சாரல்திருவிழா நடைபெறுவது உண்டு. அதன்படி இந்த ஆண்டும் சாரல் திருவிழா நாளை (23.07.2011) குற்றாலம் கலைவாணர் கலையரங்கில் துவங்குகிறது. இந்த சாரல் திருவிழா மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கு தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் சொ.கருப்பசாமி தலைமை தாங்குகிறார். பாராளுமன்ற உறுப்பினர்கள் பி.எச்.மனோஜ்பாண்டியன், பொ.லிங்கம், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.சரத்குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் சி.நடராஜன் அனைவரையும் வரவேற்று பேசுகிறார். தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் கோகுலஇந்திரா சாரல் திருவிழாவை துவக்கி வைக்கிறார். தமிழக கதர் மற்றும் தொழில்துறை அமைச்சர் ராஜா.செந்தூர்பாண்டியன் கலை நிகழ்ச்சிகளை துவக்கி வைத்து பேசுகிறார். 

துவக்க விழா நிகழ்ச்சிக்கு முன்பாக மாலை 4 மணிக்கு நெல்லை மாவட்ட அரசு இசைப்பள்ளி மாணவ, மாணவிகளின் இசை சங்கமம் நிகழ்ச்சியும், மாலை 5 மணிக்கு டி.எம்.ராஜன் குழுவினரின் கேரளா சிங்காரி மேளம் நிகழ்ச்சியும், இரவு 7.20 மணிக்கு சவுந்தர்ய காயத்திரியின் பாரதநாட்டியமும், திரைப்பட இசை அமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவின் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து 24 ம் தேதி பகல் 2.30 மணிக்கு குற்றாலம் கலைவாணர் கலையரங்கில் ஆணழகன் போட்டியும், 25 ம் தேதி பகல் 3 மணிக்கு குற்றாலம் நீச்சல் குளத்தில் நீச்சல் போட்டியும், 26 ம் தேதி காலை 10.30 மணிக்கு குற்றாலம் கலைவாணர் கலையரங்கில் கோலப்போட்டியும் நடைபெறுகிறது. 27 ம் தேதி காலை 10.30 மணிக்கு குற்றாலம் கலைவாணர் கலையரங்கில் இந்திய கலாச்சார ஆடை அலங்கார மற்றும் கொழு, கொழு குழந்தைகள் போட்டியும், 28 ம் தேதி பகல் 2 மணிக்கு குற்றாலம் கலைவாணர் கலையரங்கில் நாய்கள் கண்காட்சியும், 29 ம் தேதி மாலை 3 மணிக்கு பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி  அருகில் ரோலர் ஸ்கேட்டிங் போட்டி நடைபெறுகிறது. 30 ம்தேதி காலை 10.30 மணிக்கு குற்றாலம் சுற்றுலா வளர்ச்சி கழக படகுகுழாமில் படகு போட்டியும் நடைபெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்