முக்கிய செய்திகள்

சிறுபான்மையினருக்கு பாதிப்பை ஏற்படுத்தியவர் கருணாநிதி - முத்துமணி

வியாழக்கிழமை, 3 மார்ச் 2011      தமிழகம்
muthumani2

 

நெல்லை,மார்ச்.- 3 - மூன்றரை சதவீத உள் ஒதுக்கீடு மூலம் சிறுபான்மையின மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டார் கருணாநிதி என்று நெல்லையில் நடந்த பொதுக் கூட்டத்தில் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி.  முத்துமணி பேசினார். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் 63 வது பிறந்த நாளையொட்டி நெல்லை மேலப்பாளையத்தில் அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட இலக்கிய அணி பொருளாளர் ஆர்யா பாலு தலைமையில் மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இநத கூட்டத்தில் முன்னாள் எம்.பி. முத்துமணி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, 

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் 63 வது பிறந்த நாள் தமிழகமெங்கும் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இஸ்லாமிய சமுதாயத்தின் ஒப்பற்ற தலைவர் காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப், தமிழர் சமுதாயத்தின் தன்னிகரில்லா தலைவரும் கூட. இத்தகைய பெருமை வாய்ந்த அவர் துவக்கிய இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கருணாநிதியின் சூழ்ச்சியால் இரண்டாக பிளவுபட்டு இந்திய தேசிய லீக் என்ற புதிய இயக்கமாக உருவெடுத்தது. ஆக, முஸ்லீம் இயக்கம் பிளவுபடுத்தப்பட்டதற்கு மூல காரணமாக இருந்தவர் கருணாநிதிதான். 

ஆனால் பொதுச் செயலாளர் ஜெயலலிதா மாநிலங்களவை உறுப்பினராக இருந்த போதே இஸ்லாமிய பெருமக்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள சென்னையில் இருந்து நேரடியாக விமான சர்வீஸ் பெற்றுத் தந்தார். பின்னர் முதல்வராக பொறுப்பேற்றவுடன் இஸ்லாமியர்களுக்காக எம்.ஜி.ஆர். கொண்டு வந்த உலமா பென்சன் திட்டத்தை உயர்த்தி 2 ஆயிரம் பேருக்கு வழங்கினார் ஜெயலலிதா.

 மேலும் வக்பு வாரியத்துக்கு முதல் முதலாக பெண்மணியை நியமித்தார். உமறுப்புலவருக்கு மணிமண்டபம், காயிதே மில்லத் பெயரில் மணி மண்டபம் மற்றும் அவரது பெயரில் கல்லூரி ஆகியவற்றை நிறுவியதோடு மட்டுமல்லாமல் இஸ்லாமிய இளைஞர்கள் சுய தொழில் தொடங்க ரூ 25 ஆயிரம் வீதம் நிதியுதவி வழங்கியவர் பொதுச் செயலாளர் ஜெயலலிதா. அது மட்டுமல்லாது, அறிஞர் டாக்டர் அப்துல் கலாம் இந்திய குடியரசு தலைவராக வர முன்மொழிந்தவர் ஜெயலலிதாதான்.   

ஆனால் சிறுபான்மை மக்களுக்கு நான்தான் பாதுகாவலன் என்று மார்தட்டிக் கொள்ளும் கருணாநிதி, ஆயிஷா என்ற பெண்மணியை தீவிரவாதி போல் பிரகடனப்படுத்தி சோதனை என்ற பெயரில் கோஷா பெண்கள் அனைவரையும் அவமானப்படுத்தினார். அது மட்டுமல்லாது, வக்பு வாரியத்துக்கு ஜெயலலிதா வழங்கி வந்த ஒரு கோடி ரூபாயை நிறுத்தியவர் கருணாநிதி. நோன்பு திறக்கும் நிகழ்ச்சி என்ற பெயரில் இஸ்லாமியர்களை ஏமாற்றி வருகிறார். அ.தி.மு.க. ஆட்சியின் போது நீதிபதி குமார் ராஜரத்தினம் தலைமையில் முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு ஆய்வு வரம்பை நிர்ணயித்து முதல் முறையாக கமிஷனை அமைத்த பெருமை ஜெயலலிதாவையே சாரும். ஆனால் கருணாநிதி ஆட்சிக்கு வந்ததும் இந்த கமிஷனை கலைத்து விட்டு புதிய கமிஷனை அமைத்து அவசர கோலத்தில் அறிக்கையை பெற்று பிற்பட்டோருக்கான 30 சதவீத உள் ஒதுக்கீட்டில் இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவர்களுக்கு தலா மூன்றரை சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கியவர் கருணாநிதி. 

மேலும் மூன்றரை லட்சம் பணியாளர்களை நியமித்ததாக சொல்லும் கருணாநிதியின் கணக்குப்படி இந்த இரு சமூகங்களும் ஒன்றரை சதவீதத்திற்கு குறைவாக கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடங்களை பெற்றிருக்கிறார்கள். இலக்கிய வசனம் பேசி இனியும் சிறுபான்மையின மக்களை கருணாநிதி ஏமாற்ற முடியாது. சிறுபான்மையின மக்களின் பாதுகாப்பு அரணாக விளங்கும் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் ஏற்ற சிறுபான்மையின மக்கள் அனைவரும் ஆதரவளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: