முக்கிய செய்திகள்

நில மோசடியில் நடிகர் வடிவேல் சிக்குகிறார்

செவ்வாய்க்கிழமை, 2 ஆகஸ்ட் 2011      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஆக.2 - நிலமோசடி விவகாரத்தில் நடிகர் வடிவேலு சிக்குகிறார். ரூ.2 கோடி மதிப்புள்ள தனது நிலத்தை அபகரித்து காம்பவுண்ட் சுவர் எழுப்பி உள்ளதாகவும், இது பற்றி நியாயம் கேட்ட தன்னை மிரட்டியதாகவும், நடிகர் வடிவேலு மீது முன்னாள் வங்கி அதிகாரி ஒருவர் புறநகர் கமிஷனரிடம் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

இது பற்றி வபரம் வருமாறு:- சென்னை அஷோக்நகரில் வசிப்பவர் பழனியப்பன் (60). இவர் இந்தியன் ஓவர் சீஸ் வங்கியில் துணை பொது மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் கடந்த 2004-ம் ஆண்டு தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் தாம்பரம் முடிச்சூர் ரோட்டில் அமைந்துள்ள 34 சென்ட் நிலத்தை வாங்கியுள்ளார். 2006-ம் ஆண்டு கடன் முடிக்கப்பட்டு பழனியப்பன் பெயரில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த இடம் ஓம் சக்தி கார்மெண்ட் என்ற நிறுவனம் ஏற்கனவே வாங்கி கடனை கட்ட முடியாததால் மீண்டும் தொழில் முதலீட்டு நிறுவனம் அந்த இடத்தை கையகப்படுத்தி ஏலம் விட்டுள்ளது. ஆனால் ஏலம் எடுத்த இடத்தை உரிமையாளர் பழனியப்பன் சென்று பார்த்தபோது அந்த இடத்தை சுற்றி சிலர் காம்பவுண்ட் சுவர் எழுப்பியுள்ளனர். இது பற்றி கேட்டபோது இடத்தை வடிவேலு வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இது பற்றி விசாரித்தபோது மேற்படி இடத்தை போலியாக வடிவேலு தனது பெயருக்கு பவர் மாற்றியுள்ளதும் பின்பு அதே இடத்தை தனது மனைவிக்கு  தானமாக வழங்கியதாக பத்திரப்பதிவு செய்ததும் தெரியவந்துள்ளது. மேலும் வடிவேலுவின் மனைவி தனது மகன் சுப்ரமணி பெயரில் மாற்றியுள்ளனர்.

2009-ம் ஆண்டு இடத்தை சுற்றிலும் வடிவேலு தரப்பினர் காம்பவுண்ட் சுவர் எழுப்பி உள்ளனர். இது பற்றி பழனியப்பன் கேட்டபோது வடிவேலுவின் மேனேஜர் மற்றும் அடியாட்கள் அவரை மிரட்டி உள்ளனர். உன்னால் ஆனதை பார் என்று விரட்டி அடித்துள்ளனர்.

இது பற்றி கடந்த 2009-ம் ஆண்டு புறநகர் ஆணையர் ஜாங்கிட்டிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. தற்போது முதல்வர் நில ஆக்கிரமிப்பு தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருவதால் தனக்கு நம்பிக்கை வந்து புகார் அளித்தாக பழனியப்பன் தெரிவித்தார்.

வடிவேலு ஆக்கிரமித்த நிலத்தின் மொத்த மதிப்பு ரூ.2 கோடி ஆகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்: