முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நில அபகரிப்பு புகார்கள்: ரூ.1.29 கோடி சொத்துக்கள் மீட்பு

ஞாயிற்றுக்கிழமை, 7 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை, ஆக. 8 - மதுரை மாவட்டத்தில் நில அபகரிப்பு தொடர்பான புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் ரூ. 1.29 கோடி மதிப்பிலான நிலம் மற்றும் பணம் மீட்கப்பட்டு உரியவர்களிடம் அவை ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்ரா கார்ஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:-

மதுரை மாவட்டத்தில் மாவட்ட குற்றப்பிரிவில் நில மோசடிகள் குறித்து புகார்கள் சில மாதங்களாக பொதுமக்களால் அளிக்கப்படுகின்றன. இந்த புகார்கள் மீது நில அபகரிப்பு மீட்புப் பிரிவு விசாரணை மேற்கொண்டு துரிதமாக செயல்பட்டு வருகிறது. பல்வேறு புகார்களின் அடிப்படையில் மதுரை மாவட்டத்தில் ரூ. 1 கோடியே 29 லட்சத்து 38 ஆயிரம் மதிப்பிலான சொத்துக்கள் நிலமாக மற்றும் பணமாக மீட்கப்பட்டுள்ளன. அவை புகார்கள் அளித்தவர்களுக்கு உரிய முறையில் பெற்றுத்தரப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு வழக்குகள் விசாரணையில் உள்ளன. அந்த வழக்குகளிலும் பாதிக்கப்பட்டோரின் சொத்துக்களை மீட்க மாவட்ட காவல்துறை சார்பில் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

நில அபகரிப்பு புகார்களை உடனடியாக விசாரிக்க மாவட்ட குற்றப் பிரிவு போலீசாருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் எந்தவிதமான தயக்கமும் இன்றி இவ்வாறான மோசடிகள் குறித்து புகார் அளிக்கலாம். அந்த புகார்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உரிய விசாரணையின் அடிப்படையில் சொத்துக்கள், பணம் போன்றவைகளை மீட்டுத்தர அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்