முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சத்தியமூர்த்தி பவனில் மோதல்: ஜி.ஏ.வடிவேலு கைது

புதன்கிழமை, 10 ஆகஸ்ட் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, ஆக.10 - தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுக்கு எதிராக ஜி.ஏ.வடிவேலு தலைமையில் காங்கிரஸ் சீரமைப்புக்குழு அமைக்கப்பட்டது.   இந்த குழுவினர் சத்திய மூர்த்தி பவனில் நேற்று காங்கிரஸ் போட்டி பொதுக் குழு நடைபெறும் என்று அறிவித்தனர். இதையடுத்து காங்கிரஸ் சீரமைப்புக் குழுவை சேர்ந்த ஜி.ஏ.வடிவேலு, ஜோதி ராமலிங்கம், இதய துல்லா ஆகிய 3 பேரையும் கட்சியில் இருந்து நீக்குவதாக தங்கபாலு அறிவித்தார். சத்தியமூர்த்தி பவனில் நேற்று வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடைபெறும் என்றும் வேறு கூட்டங்களுக்கு அனுமதி கிடையாது. நானே தலைவர் நான் எடுக்கும் முடிவே இறுதியானது,  கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் உள்ளே நுழையவும் கூடாது என்று தங்கபாலு அறிவித்து இருந்தார். ஆனால் திட்டமிட்டபடி பொதுக்குழு கூட்டம் நடத்த காங்கிரஸ் சீரமைப்பு குழுவினர் ஏற்பாடு செய்தனர். போட்டி பொதுக்குழு நடத்தும் ஜி.ஏ.வடிவேலு, இதயதுல்லா கோஷ்டியினர் சத்தியமூர்த்தி பவனில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும், அதற்கு தங்கபாலு ஆட்களிடமிருந்து தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்திருந்தனர். இதனால் காங்கிரசார் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை நிலவியது. நேற்று காலையில் சத்தியமூர்த்திபவன் முன்பு போலீசார் தடுப்புவேலிகள் அமைத்து இருந்தனர். தங்கபாலு ஆதரவாளர்கள் சத்தியமூர்த்தி பவனுக்குள் திரண்டு இருந்தனர். நேரம் செல்ல செல்ல எதிர்ப்பாளர்களை எதிர்கொள்ள சத்தியமூர்த்திபவன் வாசல் முன்பு ஏராளமான தொண்டர்கள் திரண்டனர்.வெள்ளையனே வெளி யேறு இயக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் தங்கபாலு ஆதரவாளர்களுக்கு தனி அனுமதி சீட்டு கொடுக்கப்பட்டு இருந்தது. அதை வைத்திருந்தவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். காலை 11 மணி அளவில் தென்சென்னை மாவட்ட தலைவர் மங்கள் ராஜ் தலைமையில் சிலர் சத்தியமூர்த்தி பவனுக்குள் நுழைய முயன்றனர். அவர்களை தங்கபாலு ஆதரவாளர்கள் தடுத்தனர். இதனால் கைகலப்பு, தள்ளு முள்ளு ஏற்பட்டது.

பிடித்து தள்ளியதில் மங்கள்ராஜ் கீழே விழுந்தார். சிறிது நேரத்தில் ஜி.ஏ. வடிவேலு, இதயதுல்லா, மயிலை பெரியசாமி, எம்.எஸ்.திரவியம், ராமலிங்கஜோதி உள்பட ஏராளமானவர்கள் சத்தியமூர்த்தி பவனுக்கு திரண்டு வந்தனர். அவர்கள் சத்தியமூர்த்தி பவனுக்குள் நுழைய முயன்றனர். அவர்களை தங்கபாலு ஆதரவாளர்கள் தடுத்ததால் மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. போலீசார் அரண் போல் நடுவில் நின்றபடி மோதலை தவிர்த்தனர். தங்கபாலு ஆதரவாளர்கள் தங்கபாலு வாழ்க என்று கோஷம் எழுப்பினார்கள். எதிர் அணியினர் காங்கிரசை அழித்த தங்கபாலு ஒழிக என்று கோஷம் எழுப்பினார்கள். எதிர்ப்பாளர்கள் ஒருவரை கூட உள்ளே விடாமல் தங்கபாலு ஆதரவாளர்கள் தடுத்தபடி நின்றனர். இதனால் வேறு வழியின்றி ஜி.ஏ.வடிவேலு தலைமையில் தொண்டர்கள் நடுரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். உடனே போலீசார் மறியல் செய்தால் கைது செய்வோம் என்றனர்.அதையும் மீறி நடுரோட்டில் அமர்ந்தனர்.   உடனே போலீசார் அவர்களை கைது செய்து வேனில் ஏற்றினர். அதை பார்த்ததும் தங்கபாலு ஆதரவாளர்கள் தங்கபாலுக்கு ஜே என்று வெற்றிகோஷம் எழுப்பினர்.   கைது செய்யப்பட்டவர்கள் வேனுக்குள் இருந்தபோது எங்கிருந்தோ ஒரு கல் பறந்து வந்து வேன் மீது விழுந்தது. இதனால் பரபரபரப்பு ஏற்பட்டது.மறியல் செய்தவர்கள் கைதான பிறகும் வேறு யாரும் வரக்கூடும் எனக்கருதி தங்கபாலு ஆதரவாளர்கள் சத்தியமூர்த்தி பவன் வாசலிலேயே திரண்டு நின்றனர். கைதான இதயதுல்லா கூறும்போது, பொதுக்குழு உறுப்பினர்கள் பதவியே இல்லை என்று தங்கபாலு அறிவித்து விட்டார். நாங்கள் சோனியாகாந்தி உடல்நலம் பெற கூட்டு பிரார்த்தனை நடத்துவதற்காக சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தோம். ஆனால் எங்களை உள்ளே அனுமதிக்கவில்லை. எனவே நடுரோட்டில் எங்கள் பிரார்த்தனையை நிறைவு செய்தோம்.தங்கபாலுவின் அராஜக போக்கை வன்மையாக கண்டிக்கிறோம். அவருக்கு ஆதரவாக குலாம் நபி ஆசாத்தும் செயல்படுகின்றார். தங்கபாலு மீது பல்வேறு புகார்கள் உள்ளன. தமிழ் நாட்டில் கட்சியை அழித்து விட்டார்கள். இதுபற்றி டெல்லியில் நியமிக்கப்பட்டுள்ள 4 பேர் குழுவிடம் புகார் தெரிவிப்போம் என்றார்.

நேற்று சத்தியமூர்த்தி பவனில் தியாகிகள் தினம் கொண்டாடப்பட்டது. தியாகிகள் தினத்தன்று எங்கிருந்தாவது 10 தியாகிகளை அழைத்து வந்து துண்டு போர்த்துவார்கள். இந்த ஆண்டு தியாகிகள் தினம் காங்கிரஸ் கட்சியின் கோஷ்டி மோதல் தினமாக மாறிப்போனது.

இதனிடையே சத்தியமூர்த்தி பவனுக்குள் வந்தே மாதரம் என்று கோஷமிட்டபடி நுழைய முயன்ற இளங்கோவன் கோஷ்டியை சேர்ந்த மங்களராஜை தங்கபாலு கோஷ்டியினர் தள்ளிவிட்டனர். இதனால் கீழே விழுந்த மங்களராஜ், தங்கபாலு ஆதரவாளர்கள் தன்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக அண்ணாசாலை காவல்நிலையத்தில் புகார் அளித்துவிட்டு சென்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!