முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சரப்ஜித்சிங்கை விடுதலை செய்ய இந்தியா வேண்டுகோள்

வெள்ளிக்கிழமை, 12 ஆகஸ்ட் 2011      உலகம்
Image Unavailable

 

புதுடெல்லி, ஆக.12 - பாகிஸ்தானில் மரணதண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்தியர் சரப்ஜித்சிங்கை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் அரசுக்கு இந்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.  பாகிஸ்தானில் உள்ள லாகூரில் 1990 ஆம் ஆண்டு நடைபெற்ற வெடிகுண்டு சம்பவம் ஒன்றில் தொடர்பு இருப்பதாக கூறி பஞ்சாபைச் சேர்ந்த இந்தியர் சரப்ஜித்சிங் என்பவரை பாகிஸ்தான் போலீசார் கைது செய்து அவர் மீது வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் சரப்ஜித்சிங்கிற்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த வெடிகுண்டு சம்பவத்திற்கும் சரப்ஜித்சிங்கிற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று கூறப்படுகிறது. ஆள்மாறாட்டம் செய்து சரப்ஜித்சிங் மீது தவறாக வழக்கு பதிவு செய்யப்பட்டு அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். சரப்ஜித்சிங்கை விடுதலை செய்ய மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சரப்ஜித்சிங்கின் மகள் மத்திய அரசுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். 

இதன் அடிப்படையில் சரப்ஜித்சிங்கை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் அரசை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது என்று ராஜ்யசபையில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார். கேள்வி நேரத்தின்போது எழுத்து மூலமாக அளித்த பதில் ஒன்றில் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். பாகிஸ்தானில் லாகூர், மூல்தான் ஆகிய இரண்டு இடங்களில் நடைபெற்ற வெடிகுண்டு சம்பவங்களில் சரப்ஜித்சிங்கிற்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதில் அவருக்கு தொடர்பு இருக்கிறதா இல்லையா என்பது நமக்கு தெரியாது. ஆனால் மனிதாபிமான முறையில் நீண்டகாலமாக சிறை வைக்கப்பட்டிருக்கும் அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் அரசுக்கு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சரப்ஜித்சிங்கின் கருணை மனு பாகிஸ்தான் ஜனாதிபதியிடம் நிலுவையில் இருப்பதாகவும், மனிதாபிமான முறையில் அந்த கருணை மனுவை பாகிஸ்தான் பரிசீலிக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சரப்ஜித்சிங்கை பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுதலை செய்வதற்கான அனைத்து நடவடிக்கையிலும் இந்திய அரசு ஈடுபடும் என்றும் அவர் கூறினார். பாகிஸ்தானில் சிறை வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு  இந்தியர்களின்  குடும்பத்திற்கும் தலா ரூ. 3 லட்சம் கருணைத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது என்றும் கிருஷ்ணா கூறினார். பாகிஸ்தானில் தற்போது 558 இந்தியர்கள் சிறைவைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 232 பேர் இந்திய பிரஜைகள். 252 பேர் இந்திய மீனவர்கள். 74 பேர் இந்திய ராணுவத்தினர் என்றும் அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்