முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முகாமில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு உதவிகள்-ஜெயலலிதா வழங்கினார்

புதன்கிழமை, 17 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஆக.- 17 -  முகாமில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு தமிழக அரசின் நலதிட்ட  உதவிகளை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று தலைமை செயலகத்தில், தமிழக மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் நலத்திட்டங்கள் அனைத்தும் முகாமில் வாழும் இலங்கை தமிழ் மக்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்ற அறிவிப்பிற்கிணங்க பல்வேறு திட்டங்களின் கீழ், 17 இலங்கைத்தமிழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தமிழக முதல்வர் ஜெயலலிதா இலங்கைத் தமிழர்கள் நலனில் எப்போதும் மிகுந்த அக்கறையும், ஆதரவும் கொண்டு அவர்கள் நல்லமுறையில் வாழ தமிழக மக்களுக்கு கிடைக்கப்பெறும் அனைத்து நலத்திட்டங்களும் அவர்களுக்கும் கிடைத்திட நடவடிக்கை எடுத்து வருகிறார்.
ஆளுநரின் உரையில் முகாம் வாழ் இலங்கை தமிழ் மக்கள் கெளரவமாக வாழ்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் அரசால் எடுக்கப்படு என அறிவிக்கப்பட்டு, முதியோர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம், ஆதரவற்ற விதவைகளுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம், ஆதரவற்ற பெண்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம், ஏழைப் பெண்கள் திருமண உதவி திட்டத்தின்கீழ் திருமாங்கல்யத்திற்கான தங்கத்துடன் உதவித்தொகை வழங்கும் திட்டம், பெண்களுக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கும் திட்டம், பெண் குழந்தைகள் பாதுகாப்புத்திட்டம், மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு சுழல் நிதி வழங்கும் திட்டம், தொழிற் கல்லூரிகளில் படிக்கும் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கான கல்வி கட்டணச்சலுகை போன்ற நலத்திட்டங்கள் முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு முகாம்களில் இயங்கி வரும் 416 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வீதம் சுழல் நிதி வழங்கப்படும் எனவும் திருத்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், முகாம்களில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 25 கோடி ரூபாய் அரசால் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, முகாம் வாழ் இலங்கைத் தமிழர்கள் பெற்று வந்த மாதாந்திர பணக்கொடையும் உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று தலைமை செயலகத்தில், தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் நலத்திட்டங்கள் அனைத்தும் முகாம் வாழ் இலங்கை தமிழ் மக்களுக்கும் விரிவுப்படுத்தப்படும் என்ற அறிவிப்பிற்கிணங்க, திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி முகாம் வாழ் இலங்கை தமிழர்கள்  லட்சுமி வேலு, வேலு, லட்சுமி துரைசாமி ஆகியோருக்கு ஆதரவற்ற முதியோர் ஓய்வூதியத் திட்டத்திற்கான ஆணையையும், புவனேஸ்வரி,  நாககன்னி, சுந்தரியம்மாள் ஆகியோர் ஆதரவற்ற பெண்கள் ஓய்வூதியத் திட்டத்திற்கான ஆணையையும், இன்பரதி, சிவபாக்கம், கமலாதேவி ஆகியோருக்கு ஆதரவற்ற விதவையர் ஓய்வூதியத் திட்டத்திற்கான ஆணையையும், சுகநந்தினி, வத்சலா, பத்மவேணி ஆகியோருக்கு திருமண உதவி திட்டத்தின்கீழ் திருமாங்கல்யம்  செய்ய தலா 4 கிராம் தங்கம் மற்றும் 25 ஆயிரம் நிதியுதவியும், திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி முகாமில் இயங்கி வரும் அன்னை தெரசா மகளிர் சுயஉதவிக்குழுவைச் சேர்ந்த அமிர்தசெல்வநாயகி, ஜூலியட் கொன்சி, தென்றல் மகளிர் சுயஉதவிக்குழுவைச் சேர்ந்த நாகம்மாள், ஞானசீலி, புதிய உதயம் மகளிர் சுயஉதவிக் குழுவைச் சேர்ந்த விஜயா, பத்மஜோதி ஆகிய மகளிர் சுயஉதவிக்குழுக்களை சேர்ந்தவர்களுக்கு சுழல் நிதியினையும், வாசுகி, பாக்கியலட்சுமி ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்களையும் வழங்கினார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடமிருந்து நலத்திட்ட உதவிகளைப் பெற்று கொண்ட இலங்கை தமிழர்கள், தமிழக மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் நலத்திட்டங்கள் அனைத்தும் முகாம் வாழ் இலங்கை தமிழ் மக்களுக்கும் விரிவுப்படுத்தி, தங்கள் வாழ்வில் வளம் காண பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
இந்நிகழ்வின்போது, பிற்ப்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், பொதுத்துறைச் செயலாளர், மறுவாழ்வு ஆணையர் மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்