முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓவலில் இன்று 4-வது டெஸ்ட் இந்தியா தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா?

வியாழக்கிழமை, 18 ஆகஸ்ட் 2011      விளையாட்டு
Image Unavailable

லண்டன், ஆக.- 18 - இந்திய -இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி இன்று  லண்டன் ஓவல் மைதானத்தில்  துவங்குகிறது. இந்த போட்டியிலாவது வெற்றிபெற்று தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.   இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அந்நாட்டு அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் படுதோல்வியை சந்தித்துள்ளது. 4 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி தொடர்ச்சியாக 3 போட்டிகளிலும் மோசமான தோல்விகளை சந்தித்தது. மேலும் டெஸ்ட் தரவரிசை பட்டியலில் தனது நம்பர் ஒன் இடத்தையும் இங்கிலாந்திடம்  இழந்துள்ளது. இதைத் தொடர்ந்து பல்வேறு தரப்பில் இருந்தும் பெரும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது இந்திய அணி. இதனால்  இன்று ஓவலில்  துவங்கும் 4 வது டெஸ்ட் போட்டி இந்திய அணியைப் பொறுத்தவரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாகும். ஏனெனில் இந்த போட்டியிலும் தோற்றால் இந்திய அணி தனது இரண்டாவது இடத்தில் இருந்தும் இறங்கி தென் ஆப்பிரிக்காவிற்கு அடுத்ததாக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படும். இந்திய கிரிக்கெட் அணிக்கு தலைமை பொறுப்பை ஏற்ற பிறகு தோனி சந்திக்கும் முதல் டெஸ்ட் தொடர் தோல்வி இதுவாகும். வலுவான பேட்டிங் வரிசை கொண்ட இந்திய அணி இந்த தொடரின் 6 இன்னிங்ஸ்களில் ஒருமுறை கூட 300 ரன்களை தொடவில்லை என்பது பரிதாபத்திற்குரியது.  
79 ஆண்டு டெஸ்ட் வரலாற்றில் இந்திய அணி தனது மோசமான தோல்வியாக 5 - 0 என்ற கணக்கில் 1959 ம் ஆண்டு  இங்கிலாந்து அணிக்கு எதிராக தொடரை முழுவதுமாக இழந்தது. இதற்கு அடுத்தபடியாக மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக 1961-1962 ல் 5 - 0 என்ற கணக்கில் தொடரை இழந்தது. 1967 -68 ல்  4 -0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தொடரை முழுவதுமாக இழந்தது. 3 - 0 என்ற கணக்கில் 1967, 1974 ஆகிய ஆண்டுகளில் இங்கிலாந்திற்கு எதிராகவும், 1999 - 2000 மாவது ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் இந்தியா தொடரை இழந்துள்ளது.
அதிர்ஷ்டவசமாக இந்திய அணி கடைசியாக விளையாட உள்ள ஓவல் மைதானம் இந்திய அணிக்கு கடந்த காலங்களில் மிகவும் சாதகமாகவே இருந்துள்ளது. இந்த மைதானத்தில் இந்திய அணி பங்கேற்ற 10 போட்டிகளில் 2  ல் மட்டுமே தோல்வி அடைந்துள்ளது. இந்த மைதானத்தில்தான் அஜித்வடேகர் தலைமையிலான இந்திய அணி 1971 ல் இங்கிலாந்துக்கு எதிராக தொடரை வென்று சரித்திரம் படைத்தது. மேலும் இந்த மைதானத்தில் 1979-ல்  சுனில் கவாஸ்கர் 221 ரன்களையும், 2002-ல் ராகுல் டிராவிட் 217 ரன்களையும் அடித்தனர். 2007 ல்  அனில் கும்ளே தனது முதலாவது டெஸ்ட் சதத்தையும் இந்த மைதானத்தில் தான் அடித்துள்ளார்.   
தற்போது இந்திய அணியின்  பேட்டிங்கைப் பொறுத்தவரை ராகுல் டிராவிட் ஒருவர் மட்டுமே இரண்டு சதங்களை அடித்து ஓரளவு சிறப்பான இடத்தில் உள்ளார். சச்சின், லட்சுமன், ரெய்னா ஆகியோர் ரன் எடுக்க போராடி வருகிறார்கள். பந்துவீச்சில் யாரும் சோபிக்கவில்லை. இதனால் இந்த டெஸ்டில் இந்திய வீரர்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட்டால் மட்டுமே இங்கிலாந்து அணியை கட்டுப்படுத்த முடியும். கடைசி டெஸ்டில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆன்டர்சன் இல்லாதது ஓரளவு ஆறுதலாக இருந்தாலும் இங்கிலாந்தின் பந்துவீச்சு பலம் அபாரமாகவே உள்ளது. எனவே இந்திய அணி இந்த போட்டியிலாவது பொறுப்பாக விளையாடினால் மட்டுமே இனி வரும் ஒரு நாள் தொடரில் ஓரளவு சிறப்பாக  இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளும் மனவலிமை ஏற்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்