முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் முழுவதும் சமச்சீர் புத்தகங்களை வியோகிக்கும் பணி தொடர்கிறது

வியாழக்கிழமை, 18 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,ஆக.- 18 - தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் சமச்சீர் பாட வகுப்புகள் தொடங்கின. அதே நேரத்தில் புத்தகங்களை விநியோகிக்கும் பணியும் தொடர்ந்து நடைபெறுகிறது. இதுவரை மொத்தம் 70 சதவீத புத்தகங்கள் மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.  சமச்சீர் கல்வியை 10 நாட்களுக்குள் அமல்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியதை அடுத்து தமிழ்நாடு பாடநூல் கழக கிடங்குகள் கல்வி மாவட்டங்களில் வைக்கப்பட்டிருந்த புத்தகங்கள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டன. இந்த புத்தகங்களில் சர்ச்சைக்குரிய 41 பகுதிகளை நீக்க வேண்டும் என பள்ளி கல்வித் துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. இந்த பகுதிகளை நீக்கும் பணிகள் அந்தந்த பள்ளிகளில் கடந்த 4 நாட்களாக நடைபெற்று வந்தன.  சென்னை,ஈரோடு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 80 சதவீதத்துக்கும் அதிகமான புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. சென்னை மாவட்டத்தில் 90 சதவீத சமச்சீர் புத்தகங்கள் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு விட்டதாகவும், மீதமுள்ள புத்தகங்களை வழங்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அச்சடித்தல், பைண்டிங் செய்தல், கிடங்குகளுக்கு எடுத்து செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் புத்தகங்கள் தயாராகி வருகின்றன. புத்தகங்கள் முழுமையாக கிடைப்பதற்கு ஓரிரு வாரங்கள் ஆகலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மெட்ரிகுலேசன் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளுக்கு பத்தாம் வகுப்புகளை தவிர்த்து பெரும்பாலான வகுப்புகளுக்கு புத்தகங்கள் வழங்கப்படவில்லை என்று தனியார் பள்ளி நிர்வாகிகள் தெரிவித்தனர். மெட்ரிக் பள்ளிகளுக்கான புத்தகங்கள் தயாராகி வருவதாகவும், புத்தகங்கள் முழுமையாக கிடைக்க ஒரு சில நாட்கள் ஆகும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் சமச்சீர் பாடத்திட்டத்தின் கீழ் காலாண்டு தேர்வு நடத்துவது தொடர்பாக முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுரை வழங்கியுள்ளது. செப்டம்பர் 2 வது வாரம் முடிய ஒரு மாதத்துக்குள் முடிக்கப்படும் பாடங்களை வைத்து காலாண்டு தேர்வை நடத்த வேண்டும் என்று முதன்மை கல்வி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வழக்கமாக காலாண்டு தேர்வு செப்டம்பர் 2 வது வாரத்தில் நடைபெறும். இந்த ஆண்டு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 15 ம் தேதிக்கு பிறகே புத்தகங்கள் வழங்கப்படுகிறது. எனவே காலாண்டு தேர்வு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் நடத்தப்படும் பாடங்களை வைத்தே தேர்வுகளை நடத்த பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!