முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கவர்னர் உரையில் மாநில முன்னேற்றத்திற்கான எந்த அறிவிப்பும் இல்லை-அன்பழகன்

சனிக்கிழமை, 20 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

புதுச்சேரி, ஆக.- 20 - புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ. கவர்னர் உரை குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- தேர்தல் முடிந்து புதிய ஆட்சி அமைந்தவுடன் நிகழ்த்தப்படும் கவர்னர் உரையில் புதிய அரசின் கொள்கைகள், செயல்பாடுகள் ஆகியவற்றை எடுத்துக் கூற வேண்டும். ஆனால் வாக்களித்த மக்களுக்கும், கூட்டணி கட்சியான கழகத்துக்கும் துரோகம் செய்து வஞ்சகமாக ஆட்சி அமைத்தவர்கள் புதிய திட்டங்கள் குறித்து எதுவும் உரையில் இல்லை. கடந்த ஆட்சியாளர்களின் திட்டங்களையே மீண்டும் மீண்டும் கவர்னர் உரையில் எடுத்துக்கூறி மக்களை ஏமாற்றும் உரையாக கவர்னர் உரை உள்ளது. துறைமுக திட்டம், சிறப்பு பொருளாதார திட்டம், மோனோ ரெயில் திட்டம், விமான நிலையம், டைட்டல் பார்க் உள்ளிட்ட கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்டு நிறைவேற்றாத திட்டங்கள் குறித்தும், மாநில வளர்ச்சி, வேலைவாய்ப்பு, சமூக கிராம புற வளர்ச்சி ஆகியவற்றை பெருக்க அரசு எடுக்கும் எந்த அறிவிப்பும் கவர்னர் உரையில் இல்லை.
நிலத்தடி நீர் ஆதாரம் குறைந்து வரும் நிலையில் நிலத்தடி நீரை பாதுகாக்கவும், மழைநீரை சேமிப்பின் அவசியம் குறித்தும் கவர்னர் உரையில் ஏதும் இல்லை. கொலை, திருட்டு, வழிப்பறி, கொள்ளை ஆகியவை நடக்காத நாளே இல்லை என்ற நிலையில் மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு சீராக இருக்கிறது என்ற அறிவிப்பு நகைச்சுவைக்குரியதாக இருக்கிறது.
அட்டவணை இன மக்களை சமூக மற்றும் பொருளாதார ரீதியாக உயர்த்திட உரையில் எந்த திட்டமும் இல்லை. கல்வி உரிமை சட்டத்தை நிறைவேற்ற அரசு என்ன செய்யப்போகிறது என்றே தெரியவில்லை. மின்பற்றாக்குறையை போக்க தொலைநோக்கு சிந்தனையுடன் கூடிய திட்ட அறிவிப்பு எதுவும் இல்லை.
துரோகத்தால் அமைக்கப்பட்ட அரசின் கொள்கை முடிவுகளை எடுத்துரைக்க வேண்டிய இந்த உரையில் பல்வேறு குற்றச்சாட்டுளுக்கு ஆளாகியுள்ள கவர்னரின் பிரதாப நிலை தான் தெரிகிறதே தவிர மாநில முன்னேற்றத்திற்கான எந்த அறிவிப்பும் இல்லை. இந்த கவர்னர் உரை தனியார் நிறுவனத்தின் 4 ஆண்டு கால வரவு-செலவு அறிக்கையாகவே உள்ளது.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony