முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

20 ஓவர் கிரிக்கெட் சாம்பியன்ஸ் லீக் தகுதி சுற்று இன்று தொடங்குகிறது

திங்கட்கிழமை, 19 செப்டம்பர் 2011      விளையாட்டு
Image Unavailable

 

ஐதராபாத், செப்.- 19 - உலகின் முன்னணி கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் லீக் டுவென்டி - 20 கிரிக்கெட் போட்டியின் தகுதி சுற்றுகள் இன்று துவங்குகின்றன. உலகின் முன்னணி கிரிக்கெட் கிளப் அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் லீக் போட்டிகள் 23 ம் தேதி துவங்க உள்ளன. இதில் உலகில் முன்னணியில் உள்ள 10 அணிகள் பங்கேற்க உள்ளன. இதில் கடந்த ஐ.பி.எல். போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ், இரண்டாவது இடம் பிடித்த பெங்களூர் ராயல் சேலன்ஜர்ஸ், மூன்றாவது இடம் பிடித்த மும்பை இண்டியன்ஸ் ஆகிய அணிகள்  நேரடியாக கலந்துகொள்கின்றன.  இதேபோல ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நியூ சவுத் வேல்ஸ், சவுத் ஆஸ்திரேலியன் ரெட் பேக்ஸ், தென் ஆப்பிரிக்காவின்  கேப் கோப்ராஸ், வாரியர்ஸ் ஆகிய 4 அணிகள் இந்த சாம்பியன்ஸ் லீக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளன. மொத்தம் 7 அணிகள் நேரடியாக பிரதான சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.  மேலும் 3 அணிகள் எவை என்பது தகுதிச் சுற்றின் முடிவில் தெரியும். இந்த போட்டியில் கலந்துகொள்ளும் மீதமுள்ள 3 அணிகளை தேர்வு செய்யும் போட்டிகள் இன்று துவங்கி 21 ம் தேதி வரை ஐதராபாத்தில் நடைபெற உள்ளன. இந்த போட்டிகளில்  ஐ.பி.எல். போட்டியில் 4-வது இடத்தைப் பிடித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் , ஆக்லாந்து ஏசஸ்(நியூசிலாந்து), சோமர்செட் (இங்கிலாந்து), டிரினிடாட் டொபாக்கோ(வெஸ்ட் இண்டீஸ்), லீசெஸ்டர் ஷயர் பாக்ஸ்(இங்கிலாந்து), ருகுனு லெவன் (இலங்கை) ஆகிய 6 அணிகளில்  3 அணிகள் வெற்றிகளின் அடிப்படையில் முக்கிய போட்டிக்கு தேர்வு செய்யப்படும். இன்று மாலை 4 மணிக்கு  நடைபெறும் முதல்  தகுதி சுற்று போட்டியில் ருகுனு லெவன் அணி, டிரினிடாட் டொபாக்கோ அணியையும், இரவு 8 மணிக்கு நடைபெறும் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ஆக்லாந்து ஏசஸ் அணியையும் சந்திக்கின்றன.இந்த போட்டியின் பிரதான சுற்று ஆட்டங்கள் வருகிற 23 ம் தேதி தொடங்கி அக்டோபர் 9 ம் தேதிவரை நடைபெறுகின்றன. ஐதராபாத், பெங்களூர், சென்னை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் இந்த போட்டித் தொடர் நடைபெற இருக்கின்றது. 10 அணிகள் ஏ, பி, என இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவில் சென்னை சூப்பர் கிங்ஸ், கேப் கோப்ராஸ், நியூ சவுத்வேல்ஸ், மும்பை இண்டியன்ஸ் அணிகளும், தகுதி சுற்றில் வெற்றிபெறும் மேலும் ஒரு அணியும் சேர்த்து 5 அணிகள்  இப்பிரிவில் இடம்பெறும். பி பிரிவில் பெங்களூர் ராயல் சேலன்ஜர்ஸ், சவுத் ஆஸ்திரேலியன் ரெட் பேக்ஸ்,  வாரியர்ஸ் அணிகளுடன் தகுதிச் சுற்றில் வெற்றிபெறும் இரண்டு அணிகளும் ஆக மொத்தம் 5 அணிகள் இடம்பெறும். லீக் போட்டிகளில் ஒவ்வொரு அணியும் மற்ற நான்கு அணிகளுடன் தலா ஒருமுறை மோதும். லீக் சுற்றின் முடிவில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இதில் முதல் அரை இறுதிப் போட்டி வருகிற 7 ம் தேதி பெங்களூரிலும், இரண்டாவது அரையிறுதி போட்டி சென்னையிலும், இறுதிப் போட்டி அக்டோபர் 9 ம் தேதி சென்னையிலும் நடைபெற உள்ளன.    

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்